அவுஸ்திரேலிய அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், பெற்றோரை அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துவரும் வகையில் புதிய தற்காலிக பெற்றோர் விசா ஒன்று எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஜுலை முதல் அறிமுகப்படுத்தப்படுவதாக அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அண்மையில் தெரிவித்திருந்தது.

அந்த வகையில், இந்த விசா தொடர்பில் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய 12 விடயங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

1. புதிய தற்காலிக விசாவுடன் பெற்றோர் 5 வருடங்கள் வரை அவுஸ்திரேலியாவில் தங்கியிருக்க முடியும். விசா கட்டணம் எவ்வளவு என்பது இன்னமும் அறிவிக்கப்படாவிட்டாலும் இதற்கான கட்டணம் மிகக் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

2. இந்த விசா Permanent migration stream உடன் இணைக்கப்படாமல் வேறாகவே கையாளப்படும்.

3. Medicare உட்பட அரசின் எந்தவொரு நலன்புரி சேவைகளும் தற்காலிக பெற்றோர் விசாவில் வருபவர்களுக்கு வழங்கப்படமாட்டாது.

4. இந்த விசாவில் வருபவர்கள் Private health insurance- தனியார் மருத்துவக் காப்பீடு செய்திருக்க வேண்டும்.

5. தற்காலிக பெற்றோர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் பிள்ளைகள் மட்டுமே அவர்களை Sponsor செய்ய முடியும்.

6. மேலும் Sponsor செய்யும் பிள்ளைகள் இந்த விசாவுக்கான Bond- கட்டுப்பணம் ஒன்றையும் செலுத்த வேண்டியிருக்கலாம்.
7. தற்காலிக பெற்றோர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களிடம் ஆங்கிலப்புலமை எதிர்பார்க்கப்படலாம்.

8. இந்த விசாவில் ஆஸ்திரேலியா வருபவர்கள் இங்கு வேலை செய்யலாமா என்பது தொடர்பில் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை.

9. ஆண்டுக்கு எத்தனை விசா வழங்கலாம் என்ற கட்டுப்பாடு தற்காலிக பெற்றோர் விசாவுக்கு விதிக்கப்படமாட்டாது என எதிர்பார்க்கப்படுகின்றது.

10. தற்காலிக பெற்றோர் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான வயதுக் கட்டுப்பாடு விதிக்கப்படலாம்.

11. இந்த விசாவில் உள்ள பெற்றோர் ஆஸ்திரேலியாவில் தங்கியிருக்கும் காலத்தில் மரணமடைந்தால் என்ன செய்வது என்பது தொடர்பில் மக்கள் கருத்தை அறிந்து கொள்ள அரசு விரும்புகிறது. இந்த விடயம் உட்பட பல அம்சங்களில் அரசினதும் பிள்ளைகளினதும் கடப்பாடுகள் பற்றிய தெளிவின்மைகள் இருப்பதால் குறித்த விசா நடைமுறை சிக்கலானதாக அமையலாம்.

12. அறிமுகப்படுத்தப்படவுள்ள தற்காலிக விசா தொடர்பிலும் அதன் நிபந்தனைகள் தொடர்பிலும் சமூக அங்கத்தினர்களுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ள அரசு தீர்மானித்துள்ளதால் உங்கள் கருத்துக்களை அக்டோபர் 31ம் திகதி வரை temporary.parent.visa@border.gov.au என்ற முகவரியூடாக பதிவு செய்யலாம்.

Facebook Comments