சினிமாவில் எனது போராட்டம்: விக்ரம் பிரபு உருக்கம்

சினிமாவில் வெற்றி பெற நடிகர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கிறது என்று பத்திரிகையாளர்கள் மத்தியில் விக்ரம் பிரபு தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகை முன்னிட்டு, மறைந்த சிவாஜி குடும்பத்தினர் ராம்குமார், பிரபு மற்றும் விக்ரம் பிரபு மூவரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய விக்ரம் பிரபு “சினிமாவில் வெற்றி பெற நடிகர்கள் கடுமையாக போராட வேண்டியிருக்கிறது. சினிமாவில் என் தாத்தா இருந்த காலம் சினிமாவின் பொற்காலம். பிறகு தந்தை இளைய திலகம் இருந்த காலமும் சிறப்பாகத் தான் இருந்தது. ஆனால் இப்போதுள்ள சூழல் அப்படியில்லை.

நடிகர்கள் வெற்றியைப் பெற கடுமையான போராட்டங்களைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. திரையரங்குகள் படம் பார்த்த ரசிகர்கள், தற்போது தொலைக்காட்சி அதனைத் தொடர்ந்து செல்போன் என பார்க்க ஆரம்பித்திருக்கிறார்கள். இப்படியே போனால் வருங்காலத்தில் திரையரங்குகள் இருக்குமா என சந்தேகமாக இருக்கிறது.

நான் எப்போதுமே நேர்மறையாகத் தான் யோசிப்பேன், பேசுவேன். இப்போது சமூக வலைத்தளத்தில் எதிர்மறையான கருத்துகள் பகிரப்பட்டு வருகிறது. அதனை மாற்றிக் கொள்ள வேண்டும். நேர்மறையான பல விஷயங்கள் இருக்கின்றன. அதைப் பற்றி பேசுவோம், யோசிப்போம்.

நான் நடித்துள்ள ‘வீரசிவாஜி’ நவம்பரில் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ‘முடிசூடா மன்னன்’, ‘நெருப்புடா’ வெளியாகும். ‘நெருப்புடா’ படத்தை நானே தயாரித்து, நடித்து வருகிறேன். இதுவரை 50% படப்பிடிப்பு முடிந்திருக்கிறது. ஷான் ரோல்டன் இசையமைப்பில் அனிருத், சங்கர் மகாதேவன் ஆகியோர் பாடல்களை பாடியிருக்கிறார்கள். சிறப்பாக வந்திருக்கிறது.

நான் சினிமாவுக்கு வந்து 4 வருடங்கள் ஆகிவிட்டன. தாத்தாவுக்கு, அப்பாவுக்கும் ரசிகர்கள் அளித்து வந்த ஆதரவை எனக்கும் கொடுக்கிறார்கள். அதை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது” என்று தெரிவித்தார் விக்ரம் பிரபு.

Facebook Comments

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!