வரலாற்று வெற்றியினை பதிவு செய்தது பங்களாதேஷ்

இங்கிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் தனது முதலாவது வெற்றியினை இன்று பங்களாதேஷ் பெற்றுக்கொண்டுள்ளது.

2000 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தினை பெற்றுக்கொண்ட பங்களாதேஷ் அணி 16 வருடங்கள் கடந்த நிலையில் இன்று இங்கிலாந்தினை முதல் முறையாக வெற்றி கொண்டுள்ளது.

பங்களாதேஷிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இரு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியினை வெற்றிக் கொண்டது.

இரண்டாவது  டெஸ்ட் போட்டியில் முதலில் நாணயச்சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தனர்.

தனது முதலாவது இனிங்ஸில் பங்களாதேஷ் அணி 63.5  ஓவர்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்து 220 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. பங்களாதேஷ் அணி சார்பாக தமிம் இக்பால் 104 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இதனை தொடர்ந்து தனது முதலாவது இனிங்ஸினை தொடங்கிய இங்கிலாந்து அணியினர்  81.3 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் பறிக்கொடுத்து 244 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

24 ஓட்டங்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இனிங்ஸினை ஆரம்பித்த பங்களாதேஷ் 66.5 ஓவர்களில் தனது சகல விக்கட்டுக்களையும் இழந்து 296 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

273 ஓட்டங்களை வெற்றியிலக்காக கொண்டு தனது இரண்டாவது இனிங்ஸினை ஆரம்பித்த இங்கிலாந்து அணியினர் 100 ஓட்டங்களை விரைவாகவும் விக்கட் இழப்பின்றியும் பெற்றுக்கொண்டிருந்த நிலையில் இங்கிலாந்தின் வீழ்ச்சி ஆரம்பமானது.

பங்களாதேஷ் அணியினர் அபாரமான களத்தடுப்பும் பந்துவீச்சும் இங்கிலாந்து அணியினரின் வெற்றி வாய்ப்பினை தட்டி பறித்து தனதாக்கி கொண்டது.

இங்கிலாந்து அணி பங்களாதேஷின் பந்து வீச்சாளர்களிடம் 164 ஓட்டங்களுக்கு தனது அனைத்து விக்கட்டுக்களையும் பறிக்கொடுத்தது.

108 ஓட்டங்களால் தனது வரலாற்று வெற்றியினை ருசித்த பங்களாதேஷ் அணி இரு டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரினை 1-1 என்று சமநிலை செய்தது.

Facebook Comments

No Comments Yet

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!