மஹிந்த அரசினில் பெரும்பிரச்சாரங்களுடன் சிங்கள இராணுவத்தில் தமிழ் படையினரென இணைத்துக்கொள்ளப்பட்டோரை புதிய அரசு நட்டாற்றில் கைவிட்டுள்ளது. அண்மையில் ஆவா குழுவுடன் தொடர்புடையதாகக் கூறி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட இராணுவ பொறியியல் பிரிவு சிப்பாய் இந்திரகுமாரன் கபிலோசன் இராணுவ சேவையில் இல்லையென சிறிலங்கா இராணுவத்தின் பேச்சாளர் பிரிகேடியர் ரொஸான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இராணுவ சேவையில் உள்ள ஒருவர் கைதுசெய்யப்பட்டால் உடனடியாக இராணுவத் தலைமையகத்திற்கு அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்ட இராணுவப் பேச்சாளர் இந்த நடைமுறைக்கு அமைய இதுவரை எவரும் கைதுசெய்யப்பட்டதாக யாழ்ப்பாணத்திலுள்ள இராணுவ முகாமொன்றிலிருந்து அறிவிக்கப்படவில்லை என்று அடித்துக் கூறினார்.

இந்த நிலையில் இராணுவ பொறியியல் பிரிவைச் சேர்ந்த தமிழ் சிப்பாய் என கருதப்படும் இந்திரகுமாரன் கபிலோசன், 2014 ஆம் ஆண்டே இராணுவத்தின் பொறியியல் பிரிவில் இணைந்ததாக சொல்லப்படுகின்றது.முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த சில முகவர்கள் ஊடாக தமிழ் இளைஞர் யுவதிகள் சிறீலங்கா இராணுவத்தினில் கூலியாட்களாக இணைக்கப்பட்டிருந்தனர். இதனை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர்கள் காட்டிக்கொடுக்கப்பட்ட இராணுவ விசாரணைகளை எதிர்கொண்டுமிருந்தனர்.

இந்நிலையினில்  தமிழ் இராணுவத்தினில் கூலியாட்களாக இணைக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் தப்பித்து ஓடியுள்ள நிலையினில் தற்போது சிறுபகுதியினரே இணைந்து செயற்பட்டுவருகின்றனர்.

இந்த நிலையில் இன்றும் ஆவா குழுவுடன் தொடர்புடையதாகக் கூறி கொழும்பு மேலதிக நீதவான் முன்னிலையில் நிறுத்தப்பட்ட சிறீலங்கா இராணுவத்தின் தமிழ் கூலிப்பிரிவை சேர்ந்தவரையும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் இணைந்து அவர்களின் ஆலோசனைகள் மற்றும் வழிநடத்தல்களுக்கு அமைய தமிழீழ விடுதலைப் புலிகளை மீள உருவாக்க முனைந்துள்ளதாகவும் குற்றச்சாட்டியுள்ளனர்.

Facebook Comments