கிளிநொச்சி – கரைச்சி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் பொதுமக்களின் சுமார் 40 ஏக்கர் காணிகள் இராணுவத்தினர் வசமுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

மலையாளபுரத்தில் சுமார் 25 குடும்பங்களுக்கு சொந்தமான காணிகள் இராணுவத்திடமிருந்து விடுவிக்கப்படாதுள்ளதாக மக்கள் குறிப்பிட்டனர்.

நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்தியாவிற்கு சென்று, தற்போது நாடு திரும்பியுள்ள சில குடும்பத்தினரது காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படாதுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

காணி உரிமப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் தம்மிடமுள்ள போதிலும், காணிகளுக்குள் பிரவேசிப்பதற்குக் கூட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டினர்.

இந்த விடயம் தொடர்பில் இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் ரொஷான் செனவிரத்னவிடம் வினவியபோது, இந்தப் பிரச்சினை தொடர்பில் இதுவரை தமக்குத் தெரியவரவில்லை எனவும், இது தொடர்பில் மக்களால் அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் கடிதங்கள் உரிய இடங்களைச் சென்றடைந்தனவா என்பதை ஆராய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி இராணுவத் தலைமையகம் அல்லது பாதுகாப்பு அமைச்சுக்கு, காணி தொடர்பான ஆவணங்கள் அனுப்பப்படும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்க முடியும் என இராணுவ ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.

Facebook Comments