பாகிஸ்தானில் தர்கா ஒன்றில் இடம்பெற்ற பயங்கர குண்டுவெடிப்பில் குழந்தைகள், பெண்கள் உட்பட 52 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள லஸ்பெல்லா பகுதியில் பிரபலமான தர்காவிலே இக்கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

‘தமால்’ என்ற சூஃபி நடனத்தை தர்கா ஷா நூரானியில் மக்கள் கண்டு களித்துக் கொண்டிருக்கும் போது பயங்கர குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. இதில் 100ற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும் விரைந்துள்ளது.

குண்டுவெடிப்பு நிகழ்ந்த இடத்தில் மருத்துவமனை இல்லாத காரணத்தால் மீட்கப்பட்டவர்களுக்கு உடனடி சிகிச்சை அளிப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதனால் படுகாயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கராச்சி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். குண்டுவெடிப்பில் பலர் படுகாயமடைந்துள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Facebook Comments