ஏன்மா உன்ர கல்யாணத்துக்கு சொல்லேல? சொன்னாலும் அவ்வளவுதூரம் வரமாட்டன்; கிப்ட் தரமாட்டன் என்பது தெரிஞ்சுட்டுதா?”அட போங்கண்ணே, கல்யாணமே குழம்பிட்டு, நீங்க வேற”ஏன் என்னாச்சு, நல்லாத்தானே போனிச்சு?மாப்பிள வீட்டுக்காரருக்கு பிடிக்கலயாம்.ஏன் ஏன், உன்ர வடிவுக்கும் திறமைக்கும் என்ன குறை கண்டார் அந்த ஓமக்குச்சியர்?பேஸ்புக்கில் அறிமுகமான நீண்டகால தங்கச்சி ஒருத்தியோடு சம்பாஷித்த விடயங்கள் அவை.

திருமணப் பேச்சு முடிந்து நிச்சயதார்த்தமும் முடிந்து கல்யாண நாள் நெருங்கி வந்தபோது வந்த குழப்பம் அது. பேஸ்புக் தான் காரணமாம். அவள் ஒரு கவிதைக் கிறுக்கி.. காதல் கவிதைகளென்றால் வாசிப்போர்க்கு லவ் மூட் வருமளவுக்கு உணர்வுபூர்வமாக எழுதுவாள்.

ஆரம்பத்தில் டூயட் கவிதைகளையே எழுதிக்கொண்டிருந்தவள் திடீரென்று சோகக் கவிதைகளுக்கு மாறினாள்.  இப்படியே தொடர்ந்துகொண்டிருக்கையில் பொறுமையிழந்து என்ன நடந்தது என்று ஒருமுறை கேட்டேன். “ஒன்றுமில்லண்ணா, சும்மா எழுதுறன்” என்பதே பலமுறை பதிலாகக் கிடைத்தது. ஆனால் அனுபவத்து உணர்வுகளை ஒப்புவித்த வரிகளாகவே அவை இருந்தன. பின்னர் திடீரென்று கவிதைகள் எழுதுவதை நிறுத்திக்கொண்டாள்.

சமூகம்சார் கவிதைகளும் பதிவுகளும் இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து வந்தன. “திருந்திவிட்டாயா?” என்று கேட்டபோது, “இல்லை கல்யாணம் பொருந்திட்டுது, அதுதான் எழுதுவதைக் குறைத்துவிட்டேன்” என்றாள். கல்யாணத்துக்கு சொல்வேன் கண்டிப்பா வாங்கோண்ணா என்று முடித்தாள், அவ்வளவுதான்! ஏற்கனவே எழுதிய காதல் கவிதைகளையும் சோக கவிதைகளையும் அவை பெற்றிருந்த அதிகப்படியான Likes காரணமாக அழிக்காமல் விட்டுவிட்டாள். ஆனால் only me இல் மாற்றியிருக்கிறாள்.

இதுதான் அவள் செய்த முட்டாள்த்தனமான வேலை! நிச்சயம் முடிந்து மாப்பிள்ளை ஒருநாள் திடீரென்று பேஸ்புக் பார்வேர்ட் கேட்டார். மறுப்புத் தெரிவிக்க வழியின்றி கொடுத்துவிட்டாள். மாப்பிள்ளை அவளது timeline ஒவ்வொன்றாய் தட்டிக்கொண்டுபோனபோது ஒரு நீளத்துக்கு காதல் கவிதைகள் வந்துகொண்டேயிருந்தன. சோக கவிதைகள் சந்தேகங்களைப் பெருக்கின. அவ்வளவுதான்! சந்தேகங்களும் அனுமானங்களும் மூளையின் செல்லிடையே தாண்டவமாடின. நச்சுச் சிந்தனைகள் நல்லபாம்புபோல் படமெடுத்தாடின.

செய்த தவறுகள் மிக மோசமாக இருட்டடிப்புச் செய்யப்படுகின்றன என்ற எண்ணக்கரு மாப்பிள்ளையை இழிவரலாக்கியது. பிரச்சினை பெரிதாகி கல்யாணம் நின்றுபோனது……………! தவறு யார்மீது உள்ளது என்று இன்றளவும் சாடமுடியாதுள்ளது. “நான் காதலித்தது உண்மை, ஆனால் ஒருபோதுமே நேரில் சந்தித்தது கிடையாது. படங்களை மட்டும் பரிமாறிவந்தோம். பின்னர் அவன் வீட்டில் பார்த்த பெண்ணைக் கைப்பிடித்து என்னைக் கைவிட்டுவிட்டான். அந்தக் கவலையில்தான் கவிதைகள் எழுதியிருந்தேன். மற்றும்படி எமக்குள் எந்த நெருக்கமும் இருந்ததில்லை. பேஸ்புக் காதல் என்பதால் நானும் கவலை மறந்து வழமைக்கு திரும்பிவிட்டேன். அதனால்தான் வீட்டில் மாப்பிள்ளை பார்க்கவும் சம்மதித்தேன்.

ஆனால் இப்ப நிலைமை இப்படியாகிவிட்டது!” என்று உறுதியாக கூறுகிறாள். நாம் அவ்வப்போது எமது உணர்வுகளுக்குத் தீனி போடுவதாய் பொதுவில் எழுதப்படும் ஒவ்வொன்றுக்குமே சமூகத்தின் மறுதாக்கம் இருக்கும் என்பதை உணரவேண்டும். நிச்சயமற்ற காதலுக்காக கவிதைகளை எழுதி வாழ்க்கை என வருகின்றபோது பல இராமர்களால் தீயிலேற்றி மீண்டு வராத ஏராளம் சீதைகளின் கதைகள் இப்படித்தான் இன்று வந்துகொண்டிருக்கின்றன. தவறுகள் விடுவது மனித இயல்பு, ஆனால் அந்த தவறுகளிலிருந்து திருந்துவது மட்டுமல்ல தவறுகளின் தடயங்கள் அழிக்கப்படவேண்டியதும் முக்கியமானது. அது ஓர் தற்காப்பு நடவடிக்கையும்கூட

Facebook Comments