சவூதி அரேபியாவிற்கு வீட்டுப்பணிப்பெண்ணாக சென்று பல்வேறு இன்னல்களுக்கு முகங்கொடுத்த பெண்ணொருவர் தொடர்பில்;  சிலாபம் – பங்கதெனிய – மொரகெலே பிரதேசத்தில் தெரியவந்துள்ளது. 40 வயதுடைய இனோகா என்ற பெண்ணொருவரே இவ்வாறு கடந்த வருடம் தொழிலுக்காக சவூதி அரேபியா சென்றுள்ளார்.

 

சவூதிக்கு சென்று சுமார் 5 மாதங்களின் பின்னர் வீட்டு எஜமானியால் கடுமையாக தாக்கப்பட்டதாகவும், உணவு, நீர் வழங்காமல் பல்வேறு துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கியதாகவும் ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் குறித்த பெண் தனது உறவினர்களுக்கு அறிவித்துள்ளார். அவர்களும் இது தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு பல்வேறு சந்தர்ப்பங்களில் முறைப்பாடு செய்துள்ளனர் என்றும் குறித்த பெண் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அவருக்கு சவூதியில் வைத்து சத்திர சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாகவும், அதன்பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறித்த பெண் அறிவித்துள்ளார்.

தொழில்தேடி வெளிநாடுகளுக்குச் செல்லும் இலங்கைப்பெண்கள் பல கொடுமைகளை அனுபவிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது வெளிவரத்தான் செய்கின்றன.

பயிற்சி பெற்று செல்லும் பெண்களும், பயிற்சி பெறாமல் செல்லும் பெண்களும் இதில் உள்ளடங்குகின்றனர்.

வெளிநாட்டிற்கு வேலைதேடிச் செல்லும் பெண்களை அந்த நாட்டு முகாம் ஒன்றில் அடைத்து வைத்திருக்கும் காணொளிகள் அண்மையில் வெளிவந்தன.

அதேசமயம், மலையகத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு அந்த நாட்டில் நடக்கும் கொடுமைகளும் சமூகவலைத்தளங்கள் மூலம் வெளிவந்து உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டமை யாவரும் அறிந்த விடயமே.

மேலும், இலங்கையில் பயிற்சி பெறாத எவரும் வெளிநாடுகளுக்கு செல்லத்தடை என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரள நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இனியாவது இலங்கைப்பெண்களுக்கு வெளிநாடுகளில் நடக்கும் கொடுமைகளுக்கு முற்றுப்புள்ளி கிடைக்குமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Facebook Comments