தமிழ் மக்களின் உரிமைகளுக்காய் குரல்கொடுத்ததன் விளைவாக தனது இன்னுயிரை நீத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜின் நினைவாய் சாவகச்சேரியில் அமைக்கப்பட்ட சிலை, நேற்று  (ஞாயிற்றுக்கிழமை) திறந்துவைக்கப்பட்டது.

தென்மராட்சி பிரதேச செயலகத்திற்கு முன்னால் அமைக்கப்பட்டுள்ள குறித்த சிலையை, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் திறந்துவைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழரசுக் கட்சியின் தலைவரும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா மலர்மாலை அணிவித்தார்.

நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வட மாகாண சபை உறுப்பினர்கள் ஆகியோர் அதிதிகளாக கலந்துகொண்டனர். அத்துடன் கொட்டும் அடை மழையையும் பொருட்படுத்தாது பெருந்திரளான பொதுமக்களும் கலந்துகொண்டனர்.ravi

தமிழ் மக்களின் உரிமைகளுக்காய் நாடாளுமன்றிலும் வெளியிலும் அஞ்சா நெஞ்சுடன் துணிந்து குரல்கொடுத்து வந்த ரவிராஜ், கடந்த 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பத்தாம் திகதி கொழும்பு நாரஹென்பிட்ட பகுதியில் இனந்தெரியாதோரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

குறித்த கொலை தொடர்பாக கடந்த 10 வருடங்களாக விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், வழக்கின் பிரதிவாதிகளின் கோரிக்கைக்கு அமைவாக குறித்த வழக்கை ஜூரி சபையின் முன் விசாரணை செய்வதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments