ஒரு மாதத்தினுள் கணக்கறிக்கை – தவறின் சட்ட நடவடிக்கை…
  20-11-2016  ஞாயிறு கிளிநொச்சி மாவட்ட முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்க நிர்வாகத்தினரை வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள் பிற்பகல் 3 மணியளவில் கிளிநொச்சி மாவட்டத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.img_3968
கடந்த காலத்தில் கிளிநொச்சி மாவட்டத்தில் இயங்கிய நான்கு முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. நீண்ட காலமாக கிளிநொச்சி மாவட்டத்தில் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கிடையில் பிரச்சினைகளும் இழுபறிநிலைகளும் தொடர்ந்துகொண்டிருந்தமை அமைச்சர் அவர்களுக்கு தெரியப்படுத்தியதற்கு அமைவாகவே மேற்படி விசேட ஒன்றுகூடல் நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.img_3970
குறிப்பாக 2010 ஆம் ஆண்டுகாலப்பகுதியில் முதலாவது சங்கமும், 2011 ஆம் ஆண்டு இரண்டாவது சங்கமும், 2014  ஆம் ஆண்டு மூன்றாவது சங்கமும் 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் தலைமையில் நான்காவது சங்கமும் உருவாக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. மேற்படி சங்கங்கள் எவையும் தங்களது கணக்கறிக்கைகள் மற்றும் ஆவணங்களை புதிய நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்காது தனித்தனியாக செயற்பட்டிருந்தமை அமைச்சரின் விசாரணையின்போது தெரியவந்துள்ளதாக அறியக்கிடைக்கிறது.img_3977
குறித்த சந்தர்ப்பத்திலேயே வடக்கு போக்குவரத்து அமைச்சர் அவர்கள் நான்கு நிர்வாகங்களினதும் பொருளாளர்களும், இன்றிலிருந்து ஒருமாத காலத்தினுள் தங்களது கணக்கறிக்கைகளை வட மாகாண  போக்குவரத்து அதிகாரசபைக்கு ஒப்படைக்கவேண்டும் என்றும், தவறின் அவர்களுக்கு எதிராக குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென்றும் தெரிவித்துள்ளார். அதேவேளை முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் செலுத்துகின்ற சந்தாப்பணத்திற்கு குறித்த சங்கத்தினர் பொறுப்புக்கூறவேண்டியது அவர்களது கடமையென்றும், இதிலிருந்து எவரும் நழுவிவிடமுடியாது என்றும், ஒவ்வொரு சங்கத்தின் நிர்வாகக்குழுவினரும் தங்களது முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொடர்பில் வெளிப்படைத்தன்மையோடு நடந்துகொள்ளவேண்டுமென்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும் அவர் கருத்துத்தெரிவிக்கையில் கணக்கறிக்கைகள் தொடர்பில் இருக்கின்ற இழுபறிநிலைகள் சீர்செய்யப்பட்டு கிளிநொச்சி மாவட்டம் தழுவியதான புதிய நிர்வாகம் மிக விரைவாக ஏற்படுத்தப்படுமென்றும், அதன்பொருட்டு 2010 ஆம் ஆண்டில் இருந்து தற்போதுவரை சேவையில் ஈடுபடுகின்ற முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் தொடர்பான விபரங்களை போக்குவரத்து அதிகாரசபைக்கு மிகவிரைவாக சமர்ப்பிக்குமாறு நீதிமன்ற பதிவாளரால் உருவாக்கப்பட்ட நான்காவது சங்கத்தின் தலைவருக்கு பணிப்புரைவிடுத்துள்ளார். மேலும் குறித்த விசேட கலந்துரையாடலுக்கு வடக்கு மாகாண போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் அ.நிக்கொலஸ்ப்பிள்ளை அவர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
Facebook Comments