விடுதலை போராட்டத்தின் ஆணிவேர் மேதகு தலைவர் பிரபாகரனின் பிறந்ததினத்தை முன்னிட்டு ஈழத்து கலைஞர் திரு புவிகரனின் இயக்கத்திலும் புலம்பெயர் கலைஞன் திரு கரன் வரதனின் மூல திரைக்கதையிலும் உருவாகிய உன்னத படைப்பே ”அண்ணா”

அண்ணா எம் அனைவரின் மனதிலும் ஆழமாக பதிந்துள்ள காந்த சக்தி. அண்ணாவின் பிறந்ததினத்தை முன்னிட்டு இன்றைய எமது ஈழத்து நிலையினையும் எமது எதிர்பார்ப்பையும் முன்னிறுத்தி கதையை கருவாக்கி இருக்கின்றார் கரன் வரதன். அவரின் கதையின் கரு மிகவும் ஆழமானது. ஒவ்வொரு மனிதனின் மனதிலும் உறங்கியுள்ள உன்னத நினைவு. கரன் வரதனின் அண்ணா கதையின் எண்ணக்கருவுக்கு தனது சிறப்பான செயற்பாட்டின் மூலம் உயிரூட்டி இருந்தார் புவிகரன்.
கதையின் வலுவினை ஆழமாக புரிந்த நடிகை தனது பணியை செவ்வனவே செய்து இருப்பதாகவே கூறமுடிகின்றது. படத்தின் ஆரம்பத்தில் இருந்து இறுதிவரை ஒவ்வொரு நிகழ்வுகளும் மிக துல்லியமாக கவனிக்கப்பட்டு பின்னணிஇசையானது மிகவும் சிறப்பாகவே வழங்கப்பட்டுள்ளது. அந்த இசையினை வழங்கிய இசையமைப்பாளருக்கு மனம்திறந்த நன்றிகள்.capture

இரு கட்டுப்பாட்டு பிரதேசங்களை பார்வையாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதற்காக குறும்பட தொடக்கத்தில் புத்த விகாரையும் குறும்பட முடிவில் தமிழீழ எல்லை பலகையும் உயிர்ப்பான கற்பனை.

எமக்கு தமிழீழம் மிகவும் அவசியமும் அவசரமுமான தேவை என்பதனை இன்றைய சூழல் எடுத்துக்காட்டுவதற்கு அமைவாக கதையின் பின்னணி பின்னப்பட்டதும் தமிழீழம் என்ற எல்லை எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பானது அதுவே எமது தேவை என்பதனை மிகவும் இயல்பாக நடைமுறையுடன் ஒன்றிணைத்து கூறியதே இந்த குறும்படத்தின் சிறப்பம்சம்.

ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தேர்வுசெய்யப்பட்ட நடிகர்கள் மிகவும் சிறப்பாகவே தமது பாத்திரத்தின் கனதி தெரிந்து நடித்திருக்கின்றார்கள்.
அவர்கள் அனைவரையும் பாராட்டிட வார்த்தைகள் போதவில்லை.

தனது ஒளிப்பட கருவிக்குள் ஒட்டுமொத்த ஈழத்து கனவையும் அடக்க நினைத்த ஒளிபதிப்பாளர் நடிகை நடந்துவரும் இடத்தில் கமராவை அசையவிட்டு இருப்பதை உணர முடிகின்றது.அது தவிர கண்ணிற்கு குளிர்ச்சியான இடமும் ஈழத்தின் அழகும் குறும்படத்தில் மிக அழகாகவே எடுத்துக்காட்டப்பட்டு உள்ளது.

சிறந்த படத்தொகுப்பை வழங்கிய வில்ஸீயை பாராட்ட வார்த்தைகளை தேடவேண்டி உள்ளது. குறும்படத்தில் சில இடங்களில் விமர்சனங்கள் இருந்தாலும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட ”அண்ணா” என்ற பெயரை குறும்படம் கொண்டிருப்பதால் விமர்சன வார்த்தைகள் வலுவிழந்து போகின்றது.

ஒவ்வொரு ஈழத்து தமிழரின் மனதிலும் உயிரோடு உலாவும் மறக்கமுடியாத உன்னத தேசம்.
கனவும் நியமாகும் என்ற நம்பிக்கையில் கண்ணில் உயிர்ப்பை தேக்கி உள்ள காவல் தெய்வங்களினதும் வசந்தமாளிகை.
அண்ணாவின் தாயக தேசம்.

இனிவரும் காலங்களில் இந்த குழுவானது மிகவும் சிறப்பான குறும்படங்களையும் முழுநீள படங்களையும் எடுக்கவேண்டும் என்று வாழ்த்துகின்றோம்.

 

 

Facebook Comments