IMG_0780 (1)

விடுதலை அரசியல் என்பதும் உண்மையான போராட்ட அரசியல் என்பதும் அனைவருக்கும் நீதியை வழங்கும் அரசியலேயாகும். நாங்கள் விடுதலைப்போராட்டப் பாரம்பரியத்திலிருந்து வந்தவர்கள் என்பதால், மெய்யான சமத்தவத்தையும் அனைவருக்குமான நீதியையுமே கடைப்பிடிப்பவர்களாக இருக்கிறோம்.  அவ்வாறான ஒரு நீதியான அரசியலை முன்னெடுக்காத வரையில் எமது மண்ணில், எமது சமூகத்தில் உண்மையான விடுதலை சாத்தியமாகப்போவதில்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் செயலருமான முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.  இன்று (12.01.2017 ) பளை கூட்டுறவுச்சங்க மண்டபத்தில் பிரதேச மக்களுடனான சந்திப்பின் போது அவர் உரையாற்றினார். இங்கே அவர் தொடர்ந்து தெரிவிக்கும்போது –

IMG_0822

 

இந்த மண்ணிலே விடுதலைக்கனவுகளோடு ஆயிரமாயிரமாகப் போராடி வீழ்ந்த அனைத்துப் போராளிகளின் தியாகத்துக்கும் அர்ப்பணிப்புக்கும் உண்மையான மதிப்பை நாம் கொடுக்க வேண்டுமாக இருந்தால், மெய்யான, அனைவருக்கும் சமமான, பாரபட்சமில்லாத நீதியை நாம் வழங்க வேணும். அதுவே இன்றைய காலத்தின் தேவையாகும். வெறும் வாய்ப்பேச்சு அரசியல் மக்களுக்கு எத்தகைய நன்மைகளையும் தரப்போவதில்லை என்பதை வரலாறு மீண்டும் நிரூபித்துள்ளது. ஆகவே இனியும் மக்கள் வாய்ப்பேச்சு அரசியலை ஆதரிப்பார்கள் என்று யாரும் நம்பிக் கனவு காணவேண்டியதில்லை. மக்கள் தங்களுடைய சொந்த அனுபவங்களுக்கூடாகப் பட்டறிவைப் பெற்று வருகிறார்கள். ஆகவே, அவர்கள் புதிய அரசியல் சக்திகளை இன்று தேடிக்கொண்டிருக்கின்றனர். மெய்யாகவே தங்களுக்காக உழைப்பவர்கள் யார் என்று தேடுகிறார்கள். மிகப் பெரிய இழப்புகளைச் சந்தித்த மக்கள், தங்களுக்கு விசுவாசமாக உழைக்கக்கூடிய அரசியல் தலைவர்களைத் தேடுவது இயல்பானது. அந்த வகையில் காலம் எமக்குரிய பொறுப்பை உணர்த்தி நிற்கிறது. பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரசியலை, அந்த மக்களுடைய உணர்வுளோடும் அவர்களுடைய வாழ்க்கையொடும் அவர்களுடைய அபிலாசைகளோடும் நாம் முன்னெடுக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். அந்தப் பணியை நாம் செய்வோம் என்ற இங்கெ உறுதியுரைக்கிறேன். எம்மோடு பக்க பலமாக மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நிற்போம். நாம் மிகச் சவாலான நிலைகளைக் கடந்த காலத்தில் கடந்து வந்த அனுபவத்தைக் கொண்டு, புதியதொரு எதிர்காலத்தை நோக்கிப் பயணிப்போம். இது தை மாதம். தை பிறந்தால் வழி பிறக்கும் என்று சொல்வார்கள். எமது வாழ்வில் மெய்யாகவே வழி பிறக்க வேணும். அதற்கான வழிகாட்டியாகவும் பயணியாகவும் சமத்துவம், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு உழைக்கும். எமது அமைப்பில் நாளுக்கு நாள் ஏராளமானவர்கள் இணைந்து வருகிறார்கள். குறிப்பாக, இளைய தலைமுறையினர் புதிய வேகத்தோடு எம்மை நாடி வருகின்றனர். இது நல்லதொரு எதிர்காலம் தமிழ் மக்களுக்கு உருவாகப்போகிறது என்பதை உணர்த்துகின்றது என்றார்.

IMG_0810

பச்சிலைப்பள்ளிப் பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் அன்ரன் அன்பழகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் சமகால அரசியல் நிலவரம், சமத்துவம் சமூக நிதிக்கான மக்கள் அமைப்பின் நோக்கம் ஆகியன பற்றி உரையாடல் நடந்தது. ஏராளமானவர்கள் நிகழ்வில் கலந்து கொணடனர். IMG_0820

Facebook Comments