13940822000299_PhotoI

சிரியாவின் டமஸ்கஸ் நகரில் இராணுவ விமான நிலையம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பில், இஸ்ரேல் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இஸ்ரேல் நாட்டில் இருந்து அடுத்தடுத்து ஏவப்பட்ட ராக்கெட்டுகளும், ஏவுகணைகளும் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் நகரின் மேற்கு பகுதியில் உள்ள மெஸ்ஸே இராணுவ விமான நிலையம் அருகே விழுந்து வெடித்தது.

சிரிய அரசின் தேசிய செய்தி நிறுவனமான சனா இந்த தகவலை நேற்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்டு இருந்தது.

தாக்குதலை அடுத்து மெஸ்ஸே இராணுவ விமான நிலையம் அருகேயுள்ள சில பகுதிகள் தீப்பற்றி எரிந்து, கரும் புகை வெளியாகிவரும் காட்சிகளை சிரிய ஊடகங்கள் தொடர்ந்து ஒளிபரப்பி வந்தன.

சிரியாவில் அரசுக்கு எதிராக போராடிவரும் கிளர்ச்சி குழுக்களுக்கு ஆதரவாக தீவிரவாத அமைப்புகளின் உதவியுடன் இஸ்ரேல் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக சிரிய அரசு குற்றம்சாட்டியுள்ளது.

அதேவேளை, இந்த கண்மூடித்தனமான தாக்குதலை பொருட்படுத்தாமல் கிளர்ச்சி குழுக்களுக்கு எதிராக தமது நடவடிக்கை தொடரும் என்றும் சிரியா எச்சரித்துள்ளது.

எனினும், சிரியாவின் எச்சரிக்கை குறித்து இஸ்ரேல் அரசாங்கம் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Facebook Comments