கபாலி ஃபீவரைத் தாண்டுமா சச்சின் ஃபீவர்?

விளையாட்டு வீரர்களின் வாழ்க்கையை மையமாகக்கொண்டு படம் எடுப்பது பாலிவுட் திரை உலகத்தினரின் வழக்கம் என்றே சொல்லலாம்.மேரி கோம், அசாருதின், தோனி ஆகியோரின் வாழ்க்கையை வைத்து எடுத்த படங்களைத் தொடர்ந்து சச்சின் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்கியுள்ளார்கள்.

‘சச்சின் எ பில்லியன் டிரீம்ஸ் ‘என்ற பெயரில் படம் வெளிவர இருக்கிறது. இந்தத் திரைப்படம் வருகின்ற மே மாதம் 26-ம் தேதி வெளிவரப் போவதாக சச்சின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இப்படத்தை கார்னிவல் பிக்சர்ஸ் மற்றும் ரவி பாக்சண்டிகா ஆகியோரது ‘200 நாட் அவுட் ப்ரொடக்‌ஷன்’ தயாரிக்கிறது.  ஜேம்ஸ் எர்ஸ்கைன் இயக்குகிறார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இந்தப் படத்திற்கு  இசையமைக்கிறார்.

யார் ஹீரோ?

சச்சின்

தோனி கதாபாத்திரத்தில் சுஷாந்த் சிங் அற்புதமாக நடித்து இருப்பார். சரி… அப்போ சச்சின் கதாபாத்திரத்திற்கு யார் சரியாக பொருந்துவார் என இந்நேரம் யோசிக்க ஆரம்பித்து இருப்பீர்கள். ரியல் லைஃப்ல மட்டும் இல்ல ரீல் லைஃப்லயும் அவருக்கு நிகர் அவரேதான். ஆமாங்க சச்சின் டெண்டுல்கரின் வாழ்க்கை வரலாற்றுப் படமான இதில், சச்சின் டெண்டுல்கரே கதாநாயகனாக நடித்துள்ளார்.

முதற்கட்டமாக படம் ஹிந்தியில் மட்டும் வெளிவரும் என தற்போது அறிவித்துள்ளனர். மற்ற மொழிகளுக்கான டப்பிங் வேலைகள் விரைவில் நடைபெறும் என அறிவித்துள்ளனர். நமக்கு மிகவும் பிடித்த ஒரு விளையாட்டு வீரரின் வாழ்க்கை வரலாறு, அதுவும் அவரே கதாநாயகனாக வேறு நடிக்க இருப்பதால் கிரிக்கெட் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் மிரட்சியின் உச்சிக்கே சென்றுள்ளனர். 1989 ல் பாகிஸ்தானுக்கு எதிராக 16 வயதில் தான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினார். 24 ஆண்டுகால வரலாற்றை 2 மணிநேரத்தில் சொல்வது என்பது மிகவும் அசாத்தியமான, சவாலான விஷயம். அதை இயக்குநர் எவ்வாறு கையாண்டிருக்கிறார் என்பதை சச்சின் ரசிகர்கள் மட்டுமல்லாது, சினிமா ஆர்வலர்களும் மிகுந்த ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தனது தந்தை இறந்த பின் கென்யாவுக்கு எதிராக உலகக்கோப்பையில் சச்சின் அடித்த சதம், ஒருநாள் போட்டியில் முதன்முறையாக 200, 2003 உலகக்கோப்பையின் சிறப்பான ஆட்டம் என ஒவ்வொரு சச்சின் ரசிகருக்குமே அவர் சம்பந்தப்பட்ட ஸ்பெஷல் மொமண்ட்ஸ் மனதில் தங்கி இருக்கும். அவற்றை நேரலையாக சின்னத்திரையில் மட்டுமே பார்த்து இருப்பார்கள். முதன்முதலில் பெரியதிரையில் பார்க்கும் அனுபவமே தனியாகத்தான் இருக்கும்.

கிரிக்கெட் போட்டிகள் உச்சகட்டமாக ரசிக்கப்பட்டபோது, பெரிய திரைகளில் போட்டிகள் ஒளிபரப்பப்பட்ட வைபவங்களெல்லாம் நிகழ்ந்தது. இப்போது கிரிக்கெட்டே சினிமாவாக காண்பிக்கப்படுகிறது எனும்போது நாஸ்டால்ஜிக் மொமண்ட்ஸை பார்க்கத் தவறாமல் ரசிகர்கள் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற வருடம் மே மாதம் கபாலி  டிரெய்லர் வெளியிடப்பட்டபோது ஆரம்பித்த கபாலி ஃபீவர், படம் ரிலீஸாகும் வரை நீண்டு.. கன்னாபின்னாவென எதிர்பார்ப்பை எகிற வைத்தது. இந்த வருடம் மே இறுதியில் வெளியாகிறது சச்சின். அநேகமாக பள்ளி, கல்லூரிகள் விடுமுறையாக இருக்கும். அதையும் மீறி, ஆஃபீஸுக்கு லீவு போடுவது, ஆஃபீஸே லீவு விடுவது போன்ற கபாலி மொமண்ட்ஸும் ரிப்பீட் ஆகும் எனத் தெரிகிறது.

பின்ன.. சும்மாவா? சச்சின்ன்ன்ன்ன்ன்ன்.. சச்சின்!!!

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here