‘நீயே எனது உத்வேகம்’ – மனைவியைக் கலங்கவைத்த இராணுவ வீரரின் செய்தி!

கணவர் கொல்லப்பட்ட செய்தி கிடைத்த சில மணிநேரங்களில், அவர் அனுப்பியிருந்த பரிசுப்பொருட்கள் மனைவிக்குக் கிடைக்கப்பெற்ற சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.

மேஜர் சதீஷ் தஹியா (31) என்பவர் ஹரியானாவின் பானிவாடி கிராமத்தைச் சேர்ந்தவர். இவரது மனைவி சுஜாதா (27). இந்திய இராணுவ அதிகாரியான சதீஷ், கடமை நிமித்தமாக காஷ்மீரில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு ப்ரியாஷா (2) என்ற மகளும் இருக்கிறார்.

தமது மூன்றாவது திருமண நாளை (17 – இன்று) முன்னிட்டு, மனைவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்க நினைத்த சதீஷ், காஷ்மீரில் இருந்தபடியே கேக், மெழுகுவர்த்திகள் மற்றும் பூங்கொத்துக்கள் என்பனவற்றுக்கு ஓர்டர் செய்திருந்தார். ஆனால், அந்தப் பரிசு அவரது மனைவியின் கைகளில் கிடைக்கும்போது சதீஷ் உயிருடன் இல்லை.

ஜம்முவில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தாக்குதலில் சதீஷ் வீரமரணம் அடைந்தார். அவரது மரணச் செய்தி அவரது உறவினர்களுக்கு அறியத் தரப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது மனைவி சோகத்தில் ஆழ்ந்தார்.

அச்செய்தி கிடைத்த ஓரிரு மணித்தியாலங்களில், சதீஷ் அனுப்பியிருந்த திருமண நாள் பரிசுப்பொருட்கள் சுஜாதாவின் கைகளுக்குக் கிடைத்தன.  அதில், ‘நான் உன்னை உயிருக்கு உயிராக விரும்புகிறேன். நீயே எனது வாழ்க்கையின் உத்வேகம்’ என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்ட சுஜாதா, வாய்விட்டுக் கதறி அழுதார்.

ஏராளமான கிராமவாசிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளின் மத்தியில் சதீஷின் உடல் எரியூட்டப்பட்டது. தனது தந்தை இறந்ததைக் கூடப் புரிந்துகொள்ள முடியாத ப்ரியாஷா, சிரித்தபடியே தன் தந்தைக்குக் கொள்ளிவைத்த சம்பவம் அங்கிருந்த அனைவரையும் கண்ணீரில் ஆழ்த்தியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here