இளைஞர்கள் ஆயுதமேந்த அரசியல் தலைமைகளின் பேச்சுக்களே காரணம்

அரசியல்வாதிகள் சிலரின் கடந்த கால செயற்பாடுகளினாலேயே இனங்களுக்கிடையே பிரிவுகள் ஏற்பட்டு முரண்பாடுகளும் பிரச்சினைகளும் தோற்றுவிக்கப்பட்டதாக அமைச்சர் றிஸாட் பதியுதீன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்டத்தில் இளைஞர் கழகங்களின் மாவட்ட சம்மேளன நிர்வாகிகள் தெரிவு, தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் இன்று சனிக்கிழமை காலை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர் தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

இனவாதம், பிரதேசவாதம் மற்றும் மதவாதங்களால் குறிப்பிட்ட சிலரே வெற்றி பெறுகின்றனரே ஒழிய இதனால் சமூகம் தோல்வியைத் தான் சந்திக்கின்றது.மண்ணுக்காக போராடுமாறு வழி காட்டிய அரசியல் வாதிகளின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றுவதற்காக நமது தமிழ் இளைஞர்கள் கழுத்திலே சயனைட் குப்பிகளைக் கட்டிக் கொண்டு ஆயுதங்களைத் தூக்கி தமது உயிர்களை மாய்த்த வரலாறுகளை நாம் மீட்டுப் பார்க்கின்றோம்.

அரசியல் தலைமைகளின் எழுச்சிக் கோசங்களினாலும், வீரப் பிரதாப் பேச்சுக்களினாலுமே நமது இளைஞர்கள் ஆயுத வழிக்குள் பிரவேசித்தனர்.

மன்னார் மாவட்ட இளைஞர்கள் இதற்கு விதி விலக்காக இருக்கவில்லை. இந்த மாவட்டத்திலே பிறந்த விக்டர் போன்ற இளைஞர்கள் தமது உயிரை அநியாயமாக மாய்த்துள்ளனர்.

யுத்தத்தினால் கை கால்களை இழந்த பலரின் பரிதவிப்புக்கள் வேதனை தருகின்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 15 ஆயிரம் புலி உறுப்பினர்கள் புனர்வாழ்வளிக்கப்பட்ட போதும் அவர்களும் இன்னும் துன்பத்திலே தான் வாழ்கின்றனர்.

யுத்தம் முடிந்து அமைதி ஏற்பட்ட போது துன்பப்படுபவர்களுக்கு கை கொடுக்க யாருமே அப்போது வரவில்லை. மீள்குடியேற்ற அமைச்சின் பொறுப்பு என்னிடமிருந்ததால் முட்கம்பியில் முடங்கிக் கிடந்தவர்களை மீண்டும் குடியேற்ற முடிந்தது.

எமக்குள் எந்தப் பிரிவினைகளும் இனி வரவே கூடாது. பிரச்சினைகளை பேசித்தீர்த்தால் மட்டுமே முரண்பாடுகளும், சண்டைகளும் தொடராது.அதே போன்று பெரும்பான்மையாக வாழ்வோர் சிறுபான்மையினரின் கௌரவத்தை மதிப்பார்களாக இருந்தால், அவர்களை நிம்மதியாக வாழ்வதற்கு வழி விடுவார்களாயிருந்தால் நாட்டிலே சுபீட்சம் கிடைக்கும் என்று அமைச்சர் தனது உரையில் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here