காணி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள் இராணுவ வெளியேற்றம் வலியுறுத்தி கோட்டையில் ஆர்ப்பாட்டம்

காணி, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், அரசியல் கைதிகள்  இராணுவ வெளியேற்றம்   வலியுறுத்தி கோட்டையில் ஆர்ப்பாட்டம்
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய், சகல காணாமலாக்கல்களையும் வெளிப்படுத்து, நில அபகரிப்பை நிறுத்தி மக்களின் காணியிலிருந்து படையினரை வெளியேற்று என கொழும்பு கோட்டையில் சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு ஏனைய தோழமை அமைப்புகளுடன் இணைந்து போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளது.   சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளரும்  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முருகேசு சந்திரகுமார் தலைமையில் கிளிநொச்சியிலிருந்து விவசாயிகள், வணிகர்கள், காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், நில ஆக்கிரமிப்பினால் பாதிக்கப்பட்டவர்கள் எனப் பலரும் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன்போது  சமத்துவ சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் அமைப்பாளர் முருகேசு சந்திரகுமார் கருத்துத் தெரிவிக்கையில்

 “ உரிய நீதி விசாரணையின்றி, விடுதலைக்கான சாத்தியங்களற்ற நிலையில் நீண்டகாலமாக அரசியல் கைதிகள் கால வரையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருக்கின்றனர். ஆட்சிகள் மாறுகின்றன. அரசியல் போக்குகளும் மாறுகின்றன. ஆனால், அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக அரசாங்கம் கொண்டிருக்கும் நிலைப்பாட்டில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை.இந்த நிலை மாற்றப்பட வேண்டும். தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அரசியல் கைதிகள் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்பட வேணும் என இந்தப் போராட்டத்தின்போது வலியுறுத்தியிருக்கறோம்.
இதேவேளை சகல காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்குமான பொறுப்புக்கு அரசாங்கம் பதில் கூற வேணும். இது உண்மைகள் கண்டறியப்பட வேண்டிய காலமாகும். உண்மைகளைக் கண்டறிவதன் மூலமாகவே, இந்தப்பிரச்சினைக்கான தீர்வைக்காணமுடியும். படையினரிடம் சரணடைந்தவர்களை அவர்களுடைய உறவினர்கள் மீளக் கேட்கின்றனர். இதற்கான பதில் இதுவரையில் வழங்கப்படவில்லை. கையிலே கொடுக்கப்பட்டவர்கள் எங்கே என்று அவர்கள் கேட்பது நியாயமே. இதற்கான பதிலைச் சொல்லாமல் இழுத்தடிப்பது நீதியற்றதாகும்.
இதைப்போலவே பொதுமக்களின் காணிகளிலும் மக்கள் குடியிருப்புப் பகுதிகளிலும் படையினர் நிலைகொண்டிருக்கின்றனர். யுத்தம் முடிந்து எட்டு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையில் இவ்வாறு மேலாதிக்க நிலையில் படையினர் செயற்படுவதற்கு அரசாங்கம் இடமளிக்கக்கூடாது. மக்களின் உணர்வுகளையும் அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகளின் நியாயத்தையும் புரிந்து கொண்டு செயற்பட வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்குள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குறைந்தது ஒரு வாரகாலமாவது அரச தலைவர்கள் நின்று அந்த மக்களின் வாழ்க்கையை நேரில் அவதானிக்க வேண்டும். அப்போது உண்மை நிலைமை என்னவென்று தெரியும்.
தங்களுடைய பிரச்சினைகள் தீர வேணும் என்ற கோரிக்கையோடு ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் கிராமங்களிலும் தாங்கள் வாழ்கின்ற நகரங்களிலும் போராடிக்கொண்டிருக்கின்றனர். இப்போது கொழும்புக்கு வந்து அரசாங்கத்தின் காதுகளுக்குத் தங்களுடைய சேதியை உரத்துச் சொல்ல முற்படுகிறார்கள். எங்களோடு கிளிநொச்சியிலிருந்து இரவிரவாகப் பயணம் செய்து வந்தவர்கள் இங்கே இருக்கிறார்கள் .இவர்கள் தங்கள் உறவுகளை ஆண்டுக்கணக்காகத் தேடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த மக்களுடைய பிரச்சினைக்காகப் போராடுவதை நாம் ஏற்றிருக்கிறோம். அவர்களுக்கு ஆதரவாக என்றுமே இருப்போம். ஆகவே இனியும் கால தாமதங்கள் எடுததுக்கொள்ள அனுமதிக்க முடியாது என்றார்.
இந்தப் போராட்டத்தில் கிளிநொச்சி வர்த்தகர்கள், விவசாய அமைப்பினர், பெண்கள் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் எனப்பல்வேறு தரப்பினரும் பங்கேற்றிருந்தனர். அத்துடன், சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, சம உரிமை இயக்கம், முன்னிலை சோசலிசக் கட்சி, சுதந்திரத்துக்கான பெண்கள் அமைப்பு எனப் பல அமைப்புகள் இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டன. இந்தப் போராட்டம் தொடர்ச்சியாக ஒரு வாரத்துக்கு நடைபெறவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here