ஜனாதிபதி ரஷ்யா சென்றார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினது விசேட உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று காலை ரஷ்யாவிற்கு பயணமானார்.

44 வருடங்களிற்கு பின்னர் ரஷ்யாவிற்கு உத்தியோகபூர்வ விஜயத்துக்கான இலங்கை அரச தலைவருக்கு அழைப்பு கிடைத்துள்ள வகையில் இவ்விஜயம் மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

பிரதமர் ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் 1974 ஆம் ஆண்டில் மேற்கொண்ட ரஷ்ய விஜயத்திற்குப் பின்னர் இலங்கையின் அரச தலைவர் ஒருவர் ரஷ்யாவிற்கு மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விஜயம் இதுவாகும்.

கடந்த ஆண்டு இந்திய கோவா நகரில் நடைபெற்ற பிறிக்ஸ் – பிம்ஸ்ரெக் இணை மாநாட்டின் போது ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை சந்தித்து கலந்துரையாடிய பின்னர் ஏற்பட்ட தனிப்பட்ட நட்பு ஜனாதிபதிக்கான இந்த விஷேட அழைப்புக்கு காரணமாகும். உலகின் பலமிக்க அரச தலைவர்களுள் ஒருவரான ரஷ்ய ஜனாதிபதிடமிருந்து ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு கிடைத்த இந்த உத்தியோகபூர்வ அழைப்பானது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினது நட்புறவான வெளியுறவுத் தொடர்புகளில் முக்கியமான சந்தர்ப்பமென குறிப்பிடலாம்.

ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையார் இந்தோனேசியவில் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு 41 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையின் அரச தலைவருக்கு இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயம் செய்யுமாறு விடுக்கப்பட்ட அழைப்பிற்கமைய ஜனாதிபதி இரண்டு வாரங்களுக்கு முன்னர் இந்தோனேசியாவில் உத்தியோகபூர்வ விஜயத்தில் ஈடுபட்டிருந்தார்.

இலங்கைக்கு பல்வேறு அனுகூலங்கள் கிடைக்கக்கூடிய பொருளாதார, வர்த்தக, சுற்றுலா, விஞ்ஞான, தொழில்நுட்ப, கல்வி மற்றும் கலாசார துறைகள்சார் ஒப்பந்தங்கள் ஜனாதிபதியின் இந்த விஜயத்தின்போது கைச்சாத்திடப்படவுள்ளன.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினிற்கும் இடையில் நடைபெறவுள்ள உத்தியோகபூர்வ கலந்துரையாடலின்போது இரு நாடுகளுக்குமிடையில் காணப்படும் இராஜதந்திர தொடர்புகளை வலுப்படுத்தி முன்னோக்கி கொண்டு செல்வது தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளது.

இலங்கை மற்றும் ரஷ்ய நாடுகளுக்கிடையில் இராஜதந்திர தொடர்புகள் ஆரம்பமாகி 60 வருடங்கள் பூர்த்தியடைவதை முன்னிட்டு நடைபெறவுள்ள வைபவத்தில் ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இருநாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் வியாபார தொடர்புகளை மேம்படுத்தும் நோக்குடன் இரு நாடுகளையும் சேர்ந்த வர்த்தகர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வர்த்தக சந்திப்பிலும் ஜனாதிபதி கலந்துகொள்கிறார்.

மிகக் குறைந்த கடன்சுமை மற்றும் வலுவான ஏற்றுமதி வருமானத்தையும் கொண்ட ரஷ்யா, உலகில் பாரியளவான கனிய மற்றும் பெற்றோலிய படிமங்களையும், சிறந்த மொத்த தேசிய உற்பத்திப் பொருளாதாரத்தையும் ரஷ்யா கொண்டுள்ளதுடன், கலை மற்றும் விஞ்ஞானதுறையில் விசேட பாரம்பரியத்தையும், சிறந்த தொழில்நுட்ப உற்பத்திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

இலங்கைக்கும், சோவியத் ரஷ்யாவுக்கும் இடையிலான தொடர்புகள் 1957 ஆம் ஆண்டில் ஆரம்பமாகியன. தற்போது இரு நாடுகளுக்குமிடையில் சிறப்பான பொருளாதார தொடர்புகள் காணப்படுகின்றன. அவ்வாறே இலங்கை தேயிலை ஏற்றுமதியில் சுமார் 17 வீதத்திற்கு ரஷ்யாவில் சந்தை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையில் காணப்படும் நீண்டகால, சிநேகபூர்வமான மற்றும் நம்பகரமான தொடர்புகளை மேலும் உறுதிப்படுத்தி இருதரப்பு உறவுகளின் புதியதோர் அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினது இந்த இராஜதந்திர விஜயம் உறுதுணையாக அமையும்.

அத்துடன் ரஷ்ய ஜனாதிபதியின் விஷேட அழைப்பின் பேரில் விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை உயர் மரியாதையுடன் வரவேற்பதற்கு ரஷ்ய அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளது.

ஜனாதிபதியினது விஷேட உத்தியோகபூர்வ அழைப்புக்கமைய வருகைதரும் அரச தலைவர்களை விமான நிலையத்தில் இராணுவ அணிவகுப்புடன் வரவேற்பது ரஷ்ய பாரம்பரியமாகும். அதற்காக குறித்த அரச தலைவர் உள்ளிட்ட தூதுக்குழுவினர் மட்டும் பயணிக்கும் விசேட விமானத்தில் விமான நிலைய விஷேட ஓடுபாதைக்கு வரவேண்டும்.

ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்ட நாளிலிருந்து எந்தவொரு வெளிநாட்டு பயணத்துக்கும் விசேட விமானத்தை பயன்படுத்தாத ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, தனது வெளிநாட்டு உறவுகளின் சிறப்பை வெளிப்படுத்தும் இந்த விஜயத்திலும் அதே கொள்கையிலிருந்து விலகாமல், விமான நிலைய இராணுவ மரியாதையை கருத்திலெடுக்காமல் சாதாரண பயணிகள் விமானத்தில் பயணிக்க தீர்மானித்தது சிறப்பம்சமாகும். ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினரின் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்துக்கென விசேட விமானம் பாவிக்கப்பட்டால் அதற்காக பெருமளவு செலவிட வேண்டியிருக்கும்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here