கிழக்கில் மதுபானசாலைகளுக்கு இனி இடமில்லை

கிழக்கு மாகாணத்தில் மென்மேலும் மது உற்பத்திச் சாலைகளையோ, மதுச் சாலைகளையோ நிறுவி எமது மக்களின் பாரம்பரிய கலாச்சார விழுமியங்களைத் தகர்த்தெறிவதற்கு இடமளிக்க மாட்டேன் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனையில் 450 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு வரும் மது உற்பத்திச்சாலை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை தொடர்பில் கேள்வி எழுப்பியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர், தமிழ் முஸ்லிம் சிங்கள மக்கள் கூட்டிணைந்து நடத்தி வரும் கிழக்கு மாகாண சபை நல்லாட்சியில் நல்ல விடயங்களே அமுலாக்கப்படும்.

மாறாக, இலங்கைத் திருநாட்டின் தனித்துவமான மூவின மக்களினதும் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களைப் பாதிக்கின்ற சீரழிவுக் கலாசாரத்திற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்கப் போவதில்லை.

வடக்கு கிழக்கு மாகாணங்கள் யுத்தத்தினால் சீரழிந்து போயுள்ள அதேவேளை ஒட்டு மொத்த நாட்டு மக்களின் கலாசார சீரழிவுகளுக்கும் நாச வேலைகளுக்கும் மதுவும் போதைப் பொருட்களும் காரணமாக இருந்து வந்திருக்கின்றது, என்பதை நாம் இளையோருக்கு நினைவூட்டி வைக்க வேண்டும்.

அதனால்தான் கிழக்கு மாகாணத்திலிருந்து மது போதையை ஒழிக்கும் போராட்டத்தை எனது தலைமையில் ஜனாதிபதியின் பங்குபற்றலுடன் கடந்த மாதம் முன்னெடுத்தேன்.

அந்தப் போராட்டத்தை நாம் முன்கொண்டு செல்கின்ற அதேவேளை, ஏக காலத்தில் புதிய மது உற்பத்திச் சாலைகளையோ மதுபானச் சாலைகளையோ திறப்பதற்கு நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.

வடக்கு கிழக்கில் ஆயுத மோதலினால் ஏற்பட்ட அழிவுகளை விட மெல்லக் கொல்லும் நோய் என்ற அடிப்படையில் தற்போது போதைப் பொருள் பாவனை ஊக்குவிக்கப்பட்டுள்ளது.

இதனை அனைவரும் சேர்ந்து இன மத பேதமின்றி எதிர்க்க வேண்டும். சுற்றுலாவுக்குப் புகழ்பெற்ற கல்குடா, மற்றும் பாசிக்குடா கரையோரப் பிரதேசத்தை மையப்படுத்தி மதுபானச் சாலைகளை அமைப்பதால் இப்பிரதேசம் உலகப் புகழ் பெறப்போவதில்லை.

மாறாக இப்பிரதேசத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களின் கலாச்சாரம் சீரழிந்து போகும்.

தொழிலின்றி பல்லாயிரக்கணக்கானோர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் 450 கோடி ரூபாய் செலவில் மதுபான உற்பத்திச் சாலை அமைப்பதை விட வேறு பல வளங்களைப் பயன்படுத்தும் பல்வேறு உற்பத்தித் தொழிற்சாலைகளை அமைத்து நமது எதிர்கால சந்ததியினரின் பாரம்பரிய கலாச்சார பண்பாட்டு விழுமியங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here