முள்ளிக்குளம் நில மீட்பு போராட்டம் ஐந்தாவது ஆவது நாளாகவும்

முள்ளிக்குளம் கிராம மக்கள் தமது பூர்வீக நிலங்களை கடற்படையினரிடம் இருந்து மீட்பதற்காக முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை ஐந்தாவது நாளாகவும் தொடர்ந்துள்ள போதும் மாவட்டத்தில் உள்ள அரச உயர் அதிகாரிகள் தமது போராட்டம் தொடர்பில் எவ்வித அக்கரையும் இன்றி அசமந்த போக்குடன் செயற்படுவதாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

தமது பூர்வீக நிலங்களில் நிலை கொண்டுள்ள கடற்படையினரை வெளியேற்றக் கோரி முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட முள்ளிக்குளம் கிராம மக்கள் முன்னெடுத்து வருகின்ற கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை ஐந்தாவது நாளாகவும் இடம் பெற்று வருகின்றது.

குறித்த உரிமைப்போராட்டத்திற்கு பல்வேறு மட்டங்களில் இருந்து ஆதரவுகள் வழங்கப்பட்டு வருகின்றது.

குறித்த போராட்டத்திற்கு பொது அமைப்புக்கள்,சிவில் அமைப்புக்கள், அருட்தந்தையர்கள்,மீனவ அமைப்புக்களின் பிரதி நிதிகள்,தொண்டு அமைப்புக்களின் பிரதி நிதிகள்,வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள்,உற்பட பல்வேறு தரப்பினரும் தொடர்ச்சியாக ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்றைய தினம் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார் உற்பட அருட்தந்தையர்கள் நேரடியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களை சந்தித்துள்ளனர்.

எனினும் தமது போராட்டம் குறித்து மாவட்டத்தில் உள்ள உயர் அதிகாரிகள் இது வரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ள வில்லை என தெரிவித்த முள்ளிக்குளம் மக்கள் இன்னும் எத்தனை நாட்களாக இருந்தாலும் தமது நிலம் மீட்கப்படும் வரை போராட்டம் தொடரும் என அந்த மக்கள் தெரிவித்தனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here