செட்டிகுளம் வீரபுரம் மக்களின் காணிப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு

இரண்டு இனங்களுக்கிடையிலும் முரண்பாடுகள் தோற்றுவிக்கப்படாத வகையில் செட்டிகுளம் வீரபுரம் மக்களின் காணிப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என வட மாகாண சுகாதார அமைச்சர் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

எல்லை நிர்ணயம் மற்றும் காணிக்கான ஆவணங்கள் வைத்திருப்பவர்களுக்கு காணியை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பிலான கலந்துரையாடல் வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்றது.

இதனைதொடர்ந்து அமைச்சரின் வேண்டுகோளிற்கமைய மாவட்ட அரசாங்க அதிபர் றோகனபுஸ்பகுமார தலைமையில் விசேட கூட்டமொன்று மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இதன்போது மாவட்ட அரசாங்க அதிபரிடம் இம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வவுனியா செட்டிகுளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட பெரியபுளியாலங்குளம் கிராம அலுவலர் பிரிவிலுள்ள வீரபுரம் கிராமமானது குடியேற்றக் கிராமமாகும்.

இப்பிரதேசத்தில் 1996ஆம் அண்டுகளில் 400 குடும்பங்கள் குடியேற்றப்பட்டன.

குறித்த மக்களுக்கு வீடமைப்பு அதிகார சபையினூடாக வீட்டுத்திட்டமும், தலா 6 பரப்பு காணி குடியிருப்பதற்கும், வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒவ்வாரு குடும்பத்திற்கும் ஒரு ஏக்கர் வீதம் மேட்டுகாணிகளும் வழங்கப்பட்டிருந்தன.

மேலும் இவற்றிற்கான காணி அனுமதிப்பத்திரங்களும் பிரதேச செயலகத்தினால் வழங்கப்பட்டிருந்தன.

இந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினால் அங்கிருந்த மக்கள் இந்தியாவுக்கும், வேறு பிரதேசங்களுக்கும் இடம்பெயர்ந்த நிலையில் தற்போது மீள்குடியேறி வாழ்ந்து வருகின்றனர்.

இதேவேளை இவர்களுக்கு வழங்கப்பட்ட மேட்டுக்காணிகளை அயலிலுள்ள கிராமங்களை சேர்ந்த பெரும்பான்மையினத்தை சேர்ந்த சிலரும், ஊர்காவல் படையினரும் தமது தேவைகளுக்காக காடுகளை தூய்மை படுத்துவதாக பொதுமக்களால் கடந்தவாரம் வடமாகாண சுகாதார அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

சுகாதார அமைச்சரின் தலையீட்டினால் அத்துமீறிய காணி சுவீகரிப்பு முயற்சி அரசாங்க அதிபரூடாக தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டிருந்தது

எனவே மக்களின் குடியேற்றப்பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில் இக்கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் வவுனியா தெற்கு பிரதேச செயலாளர், வெங்கலச்செட்டிகுளம் உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலகங்களின் காணிக்கிளைகளின் காணி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here