வடக்கு முதல்வர் எத்தனை தடவை சபைக்கு வந்தார்? எதிர்க்கட்சித் தலைவர்

சுகயீனம் காரணமாக கொழும்பு சென்றிருக்கும் முதலமைச்சர் தொடர்பாக அவதூறு பேசியதுடன், வடமாகாண சபை தமிழ் மக்களுக்கு ஒன்றுமே செய்யவில்லை என கூறிய மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசாவுக்கு மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம் தகுந்த பதிலடி கொடுத்திருக்கின்றார்.

வடமாகாண சபையின் 85ம் அமர்வு இன்றைய தினம் நடைபெற்றிருந்தது. இதன்போது மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா முதலமைச்சரிடம் தான் கேட்க இருந்த கேள்விகளை கேட்பதற்கு முதலமைச்சர் சபையில் இல்லாமையினால் ஆத்திரமடைந்தார்.

இதனை தொடர்ந்து முதலமைச்சர் சபைக்கு வராத நிலையில் கேள்விகளுக்கு பதிலளிக்க உரிய ஒருவர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர்,

இந்த வருடம் முதலமைச்சர் எத்தனை தடவை சபைக்கு வந்தார் என எண்ணி பார்க்கும் படி கூறியதுடன், ஆளுநர் ஆட்சியில் வடமாகாண சபை இருந்ததை விடவும் இப்போது நீங்கள் என்ன அதிகமாக செய்து விட்டீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து வடமாகாணசபை தமிழ் மக்களுக்கு ஒன்றையுமே செய்யவில்லை எனவும் கூறினார். இந்த குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சி உறுப்பினர்களான தவநாதன் மற்றும் ஜவாகீர் போன்றவர்களும் முன்வைத்தனர்.

இதேபால் ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலரும் இந்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இந்நிலையில் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த மாகாண சுகாதார அமைச்சர் பா.சத்தியலிங்கம்,

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சிலர் சபைக்குள் அரசியல் நடத்த நினைக்கிறார்கள். எமக்கும் அரசியல் நடத்த தெரியும். அதேபோல் முதலமைச்சர் சுகயீனம் காரணமாகவே சபைக்கு வரவில்லை.

அவர் வராமை தொடர்பாக முறையாக அறிவித்திருக்கின்றார். அது தெரிந்தும் இவ்வாறு பேச இயலாது. அதேபோல் நாங்கள் என்ன செய்திருக்கின்றோம் என மக்களுக்கு தெரியும்.

அதனை விட சட்டரீதியான ஆவணங்களும் இருக்கின்றன. அவற்றை பார்த்து விட்டு வந்து பேசவேண்டும் என கூறினார்.

மேலும் ஆளுங்கட்சியில் இருந்து கொண்டு குற்றஞ்சாட்டியவர்களுக்கு கருத்து கூறும்போது, அண்ணாந்து பார்த்து துப்பாதீர்கள் என சுகாதார அமைச்சர் பதிலளித்தார்.

இதேவேளை மாகாண சபை பெண் உறுப்பினர் அனந்தி சசிதரன் குறிப்பிடுகையில், எதிர்க்கட்சி தலைவர் இப்போதுதான் எதிர்க்கட்சி தலைவராக செயற்படுகின்றார்.

இதற்கு முன்னர் அவர் ஆளுங்கட்சியுடன் இணங்கி செயற்பட்டவர். மேலும் எதிர்க்கட்சி தலைவர் முன்னராவே தனது பதவிக்குரிய கடமையை சரியாக செய்திருந்தால் ஆளுங்கட்சி மீது அவர் சுமத்திய பல தவறுகள் திருத்தப்பட்டிருக்கும் என்றார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here