சுமந்திரனிடம் இதற்கெல்லாம் பதில் இருக்கிறதா?

சர்வதேச நாடுகளுக்கு ஆதவாக செயற்பட்டமையால் தமிழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டதா? என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழ்மக்களின் வாழ்வுரிமைக்கான செயற்பாட்டு மையத்தின் ஏற்பாட்டில் “ஜெனிவாக் களமும் தமிழ்த் தலைமைகளும்” எனும் தொனிப் பொருளிலான கருத்துரையும் கலந்துரையாடலும் நேற்று பிற்பகல் யாழ். நல்லூர் நாவலர் கலாசார மண்டபத்தில் குறித்த செயற்பாட்டு மையத்தின் இணைப்பாளர் என்.இன்பம் தலைமையில் இடம்பெற்றது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

வல்லரசு நாடுகள் மத்தியில் தனித்திருந்து நாங்கள் எதுவும் செய்ய முடியாது. ஆகவே, நாங்கள் அவர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் என சுமந்திரன் கூறுகிறார்.

ஆனால், நாங்கள் வல்லரசு நாடுகளின் தீர்மானத்திற்கு ஆதரவாகச் செயற்பட்டமையால் தமிழ் மக்களின் நலன்கள் பாதுகாக்கப்பட்டதா? குறிப்பாகத் தமிழ் மக்கள் தங்கள் சொந்தவிடங்களில் மீளக் குடியேற்றப்பட்டார்களா?, இராணுவம் வட-கிழக்கிலிருந்து வெளியேற்றப்பட்டதா?, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் கண்டுபிடிக்கப்பட்டார்களா?, அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டார்களா? எனக் கேட்க விரும்புகிறோம்.

இலங்கையில் ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வந்ததில் அமெரிக்காவிற்கும், இந்தியாவிற்கும் பெரும் பங்கிருக்கிறது என்பது வெளிப்படையான உண்மை.

ஆகவே, தாங்கள் உருவாக்கிய ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்தும் பாதுகாக்க வேண்டும். அதற்குத் தமிழ்மக்களுடைய ஒத்துழைப்புமிருக்க வேண்டும். தமிழ்மக்களுடைய ஒத்துழைப்பைத் தமிழ்மக்களால் தெரிவு செய்யப்பட்ட பாராளுமன்றத் தலைமை மூலம் சூசகமாகப் பெற்றுக் கொண்டார்கள்.

2015 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் இலங்கைக்கு 18 மாத கால அவகாசம் வழங்கினார்கள். அந்த 18 மாத கால அவகாசத்திற்குள் இலங்கை அரசாங்கத்தால் எதனையும் செய்ய முடியவில்லை. இப்பொழுது 24 மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது.

குறைந்த பட்சம் 25 வீதமானவையேனும் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கிறது. மீதி நடைமுறைப்படுத்தப்பட வில்லையெனில் ஒரு வாய்ப்பை வழங்குவதில் அர்த்தமுள்ளது.

ஆனாலும், காணாமற் போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகத்தை அமைத்தல் எனும் சட்டமூலம் மாத்திரம் பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டாலும் அந்தச் சட்ட மூலம் கூட இன்றுவரை நடைமுறைப்படுத்தப்படவில்லை. அந்தச் சட்ட மூலத்திற்குப் புதிய திருத்தங்கள் வரவிருக்கிறது.

அந்தத் திருத்தங்கள் எப்போது நடைமுறைக்கு வரும் என்பது தெரியாது. ஆகவே, 18 மாதங்கள் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தின் போது எதுவுமே நடைமுறைப்படுத்தாத இலங்கை அரசாங்கம் 24 மாத காலத்திற்குள் என்ன செய்யப் போகிறது என்பது ஒரு பெரிய கேள்வி.

இலங்கையில் கண்காணிப்புக்காக ஐ. நாவின் அலுவலகம் அமைக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்திய போதிலும் இந்தத் தடவை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள இலங்கை தொடர்பான தீர்மானத்தில் இது தொடர்பில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

இராணுவம் வெளியேறுவதற்கான கால அவகாசம், இடம்பெயர்ந்த மக்கள் மீளக் குடியேறுவதற்கான கால அவகாசம், காணாமற் போனோரைக் கண்டறிவதற்கான கால அவகாசம் என ஒரு மண்ணாங்கட்டியும் இம்முறை தீர்மானத்தில் கிடையாது.

ஆனாலும், எதிர்வரும் இரண்டு வருட காலத்தில் நீங்கள் என்ன வேண்டுமானாலும் மேற்கொள்ளுங்கள் எனும் வகையிலேயே இலங்கை தொடர்பான தீர்மானம் அமைந்துள்ளது.

இரண்டு வருடம் முடிவடைந்த பின்னரும் எந்தவித நடவடிக்கையும் யாரும் எடுக்கப் போவது கிடையாது. அதற்கான எந்தவித உரித்தும், உரிமையும் ஐ. நா மனித உரிமைகள் ஆணையகத்திற்குக் கிடையாது.

ஆகவே, இரண்டு வருடகால அவகாசத்திற்குப் பின்னர் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை எனவே இலங்கை அரசாங்கம் கூறப் போகிறது.

எது நடந்தாலும் பரவாயில்லை. இந்த அரசாங்கம் பாதுகாக்கப்பட வேண்டும். இந்த அரசாங்கத்திற்கு உள் நாட்டிலிருந்தும், சர்வதேச நாடுகளிலிருந்தும் அழுத்தங்கள் எதுவும் வராமல் ஐந்து வருடங்கள் தொடர்ந்தும் ஆட்சியில் நிலைத்திருக்க வேண்டும் எனக் கூட்டமைப்பின் தலைமை விரும்புகிறது.

கடந்த பெப்ரவரி மாதம்-27 ஆம் திகதியே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத் தொடர் ஜெனிவாவில் ஆரம்பமாகியது.

ஆனால், ஜெனிவாவில் கூட்டத் தொடர் ஆரம்பமாகுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னரே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை இலங்கைக்கு இரண்டு வருட கால அவகாசம் கொடுப்பதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் கிடையாது என அமெரிக்காவிடம் கூறி விட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here