வவுனியாவில் அமைக்கப்படும் தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு மக்கள் எதிர்ப்பு

வவுனியாவில் குடிமனை செறிவாக உள்ள பகுதியில் தொலைபேசி நிறுவனம் ஒன்றின் தொலைத்தொடர்பு கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில்,

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதி மற்றும் 10ஆம் ஒழுங்கைப் பகுதி அதிக குடியிருப்புக்கள் உள்ள பகுதியாகவும், மாணவர்கள் கல்வி கற்கும் தனியார் கல்வி நிலையங்கள் அதிகமாகவுள்ள பகுதியாகவும் சனச் செறிவு மிக்க பகுதியாகவும் உள்ளது.

இப்பகுதியில் உள்ள தனியார் ஒருவருக்கு சொந்தமான காணியில் தனியார் தொலைபேசி நிறுவனம் ஒன்று தொலைத்தொடர்பு கோபுரத்தை அமைத்து வருகிறது. இதனால் எமக்கு பாதிப்பு ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.

மேலும் வவுனியாவில் மக்கள் செறிவற்ற பகுதிகளில் பல காணிகள் இருந்தும் மக்களது நாளாந்த வாழ்க்கை மற்றும் இயல்பு நிலையை குழப்பும் வகையில் இந்த தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்படுவதற்கான காரணம் என்ன என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை இந்தச்செயற்பாட்டை உடனடியாக தடுத்து நிறுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இல்லாவிடின் வாழ்வுரிமைக்காக நாங்கள் வீதியில் இறங்கி போராட வேண்டி வரும் என அவர்கள் சுட்டிக்காட்டி உள்ளனர்.

இது தொடர்பில் வவுனியா நகரசபைச் செயலாளர் இ.தயாபரனைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,

குறித்த தொலைத் தொடர்பு கோபுரம் அமைப்பதற்காக எம்மிடம் அனுமதி கோரி விண்ணப்பித்துள்ளார்கள். ஆனால் இன்னும் அனுமதி வழங்கவில்லை.

நகரசபையின் அனுமதி பெறாது மேற்கொள்ளப்பட்டு வந்த வேலைகள் மக்களது முறைப்பாட்டையடுத்து கடந்த சனிக்கிழமை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

தற்போது இது தொடர்பில் ஆராய்ந்து வருகின்றோம். மேலும் மக்களது கோரிக்கைக்கே முன்னுரிமை வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here