‘தீர்ப்பு வழங்குவது முக்கியமல்ல, அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்’

தீர்ப்ப எழுதுவது முக்கியமல்ல என்றும் குறித்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்துள்ளார்.

யாழ். மேல் நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த நெப்போலியன், மதன் ஆகிய இருவரையும் இங்கிலாந்தில் இருந்து நாடு கடத்த தேவையான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு நேற்று (திங்கட்கிழமை) உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன் போதே நீதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“ஊர்காவற்துறை பகுதிக்கு தேர்தல் பிரசாரம் செய்ய சென்றவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதில் இருவர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகள் இருவர் இலங்கையில் இருந்து தப்பி சென்று இங்கிலாந்தில் தலைமறைவாக உள்ளனர்.

குறித்த இருவரும் நாடு கடத்தப்பட வேண்டும். ஒரு நாட்டில் குற்றவாளியாக காணப்பட்ட ஒருவர் வேறு ஒரு நாட்டில் வசித்தால் அவரை நாடு கடத்த வேண்டும் என நாடுகளுக்கு இடையில் ஒப்பந்தம் உள்ளது. அதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆகவே, இந்த இரட்டை கொலை குற்றவாளிகள் இருவரும் நாடு கடத்தப்படுவது தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளில் ஜனாதிபதி நேரடி தலையீடு செய்ய வேண்டும். எனவே ஜனாதிபதி செயலகத்திற்கு நீதிமன்ற பதிவாளர் தகவல்களை அனுப்பி வைக்க வேண்டும்” என குறிப்பிட்டார்.

கடந்த 2001ஆம் ஆண்டு ஊர்காவற்றுறைக்கு தேர்தல் பரப்புரைக்கு சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது நாரந்தனை பகுதியில் வைத்து மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் இருவர் படுகொலை செய்யப்பட்டதுடன் 18 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகி இருந்தனர்.

சம்பவத்தின் குற்றவாளிகளாக யாழ். மேல் நீதிமன்றத்தால் அடையாளப்படுத்தப்பட்ட நெப்போலியன், மதனராசா உள்ளிட்ட மூவருக்கு இரட்டை மரண தண்டனையும், 20 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் தண்டப் பணமும் விதித்து நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here