சுத்தமான குடி நீருக்காக 12 வருடங்களாக போராடும் மக்கள்!

லிந்துலை ஹோல்றீம், கொணன் தோட்டப்பிரிவில் வாழும் மக்கள் சுத்தமான குடி நீரை பெற்றுக்கொள்ள முடியாமல் 12 வருடங்களாக பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த பிரதேசத்தில் சுமார் 185 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் சுத்தமான குடிநீரை பெற்றுக்கொள்ள முடியாமல் பல சிரமங்களை எதிர்நோக்கி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மலையக அரசியல் வாதிகள் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு எங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என இத்தோட்டமக்கள் தெரிவிக்கின்றனர்.

12 வருடங்களாக சுத்தமான குடி நீருக்காக போராடி வருவதாகவும், தினமும் அதிகாலை 05 மணிமுதல் 07 மணிவரை தண்ணீருக்காக காத்திருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதன் காரணமாக தோட்ட தொழிலுக்கு நேரத்துடன் செல்லமுடியாமலும், பாடசாலை மாணவர்கள் உரிய நேரத்திற்கு பாடசாலைக்கு செல்ல முடியாமல் இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மலையகம் என்றாலே இயற்கை வளங்கள் கொட்டிக்கிடக்கும் இடமாகும். இதில் மிக முக்கியமான வளம் தான் நீர். எங்கு பார்த்தாலும் குளங்கள், நீர் ஓடைகள், ஊற்று நீர் என்பன இயற்கையாகவே காணப்படுகின்றது.

இவ்வாறு மலையகத்தில் நீர் வளங்கள் காணப்படுகின்ற போதிலும், இவர்கள் ஒரு கோப்பையில் சுத்தமான குடிநீரினை பெற்றுக்கொள்ள முடியாமல் அவதியுறும் நிலை இன்றும் தொடர்கின்றது.

இலங்கையில் நீர் பாசன அமைச்சு தனியாக இருக்கின்ற போதிலும் இந்த அமைச்சின் செயற்பாடுகள் மலையக மக்களுக்கு எட்டாக் கனியாகவே காணப்படுகின்றது.

இலங்கையை பொருத்தவரையில் கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு அமைச்சின் நடவடிக்கைகள் கனிசமான அளவு நடைபெறுவதை நாம் உணரமுடியும்.

ஆனால் பெருந்தோட்டத்தினை பொருத்தவரையில் நாட்டிற்கு உழைத்து உழைத்து தேய்ந்துபோன இச்சமூகம் பருகும் ஒரு கோப்பை குடி நீரும் அசுத்தமானதாகவே உள்ளது.

இன்று எத்தனையோ தோட்டங்களில் வாழும் மக்கள் குடி நீரை பெற்றுக்கொள்ள முடியாமல் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதுடன் ஒரு குடம் தண்ணீருக்காக பல மணிநேரம் காத்திருப்பது வேதனை தரும் விடயமாகும்.

மலையக அரசியல் வாதிகள் தங்களின் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்துகொண்டு இம்மக்களின் தேவைகளை பூர்த்திசெய்யாமல் இம்மக்களை அடிமையாக வைத்துக்கொண்டு அரசியல் காய் நகர்த்தும் செயற்பாடு பொருத்தமற்றதாகும்.

இந்நிலையில், மலையக அரசியல் வாதிகள் எங்களுடைய பிரச்சினைகளுக்கு உரிய தீர்வினை பெற்றுக்கொடுக்குமாறும் இத்தோட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here