குருணாகல் விபத்தில் தந்தையும் 1 1/2  வயது மகளும் பலியான பரிதாபம்!

கொழும்பு – குருணாகல் வீதியில், போயகனே பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

முச்சக்கர வண்டி ஒன்றும் டிப்பர் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இன்று (10) அதிகாலை 1.00 மணியளவில் இடம்பெற்ற குறித்த விபத்தில், முச்சக்கர வண்டியை ஓட்டிச் சென்ற, ஹர்ஷ மதுசங்க (26) மற்றும் முச்சக்கர வண்டியில் பயணித்த, அவரது ஒன்றரை வயது மகள் மற்றும் பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர் மரணமடைந்துள்ளனர்.

குறித்த சந்தர்ப்பத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த மற்றுமொரு பெண் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்தை அடுத்து,குறித்த நால்வரும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மூவர் மரணமடைந்துள்ளதாகவும், தந்தை, மகள் ஆகிய இருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளதோடு, அவர்களோடு பயணித்த பெண்ணின் விபரம் குறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

விபத்து தொடர்பில், டிப்பர் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, சடலங்கள் இன்றைய தினம் (10) பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்படவுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது குறித்தான மேலதிக விசாரணைகளை பொத்துஹெர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here