யாழில் இளைஞர் ஒருவர் மர்மமான முறையில் கடத்தல்! விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு

யாழில் இளைஞர் ஒருவர் கடத்தப்பட்டு, சட்டவிரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டு உள்ளமை தொடர்பில் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, மல்லாகம் நீதிவான் நேற்று புதன்கிழமை உத்தரவு இட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தை சேர்ந்தவர்கள் என தம்மை அடையாளப்படுத்திய நான்கு நபர்கள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிவில் உடையில் திரவியநாதன் நகுலேஸ்வரன் எனும் இளைஞனின் வீட்டுக்கு சென்று விசாரணைக்கு என அழைத்து சென்றுள்ளனர்.

அது தொடர்பில் அவரது மனைவி வட்டுகோட்டை பொலிஸ் நிலையத்திற்கு சென்று விசாரித்த போது தாம் எவரையும் கைது செய்யவில்லை. என கூறி அவரது மனைவியை பொலிஸார் திருப்பி அனுப்பியுள்ளனர்.

அதன் பின் சில நாட்களின் பின்னர் நகுலேஸ்வரன், தனது மனைவிக்கு புதிய தொலைபேசி இலக்கம் ஒன்றில் இருந்து தொடர்பு கொண்டு ,தன்னை புலனாய்வு துறையினர் கைது செய்து அனுராதபுரத்தில் தடுத்து வைத்துள்ளதாகவும், இந்த தகவல்களை எவரிடமும் கூற வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

அந்நிலையில் நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) நகுலேஸ்வரனின் மனைவியின் தொலைபேசிக்கு தொடர்பினை ஏற்படுத்திய இனம் தெரியாத நபர் ஒருவர் , உங்கள் கணவரை நாளைய தினம் (புதன்கிழமை) மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் அவா் மீது உள்ள தாபரிப்பு வழக்குக்காக முற்படுத்த உள்ளோம் எனவும் இது தொடர்பில் எதுவும் எவருக்கும் தெரிய படுத்த வேண்டாம் எனவும் கோரியுள்ளார்.

அதன் பிரகாரம் நேற்று (புதன்கிழமை) நீதிமன்றில் முற்படுத்துவதற்காக நகுலேஸ்வரனை சிவில் உடையில் வாகனம் ஒன்றில் நால்வர் அழைத்து வந்திருந்தனர்.

அதனை கண்ணுற்ற மனைவி கணவருடன் கதைக்க முற்பட்ட வேளை , இன்றைய தினம் கணவனை நீதிமன்றுக்கு அழைத்து வருவோம் என வேறு எவருக்கும் தெரியப்படுத்தியதா? என கணவனை அழைத்து வந்தவர்கள் வினாவியுள்ளனர்.

அதற்கு மனைவி சட்டத்தரணிக்கு தெரியப்படுத்தினேன் என கூறியதும் நகுலேஸ்வரனை அழைத்து வந்தவர்கள் மன்றில் முற்படுத்தாமல் அவரை மீண்டும் தம்முடன் அழைத்து சென்றுள்ளனர்.

அந்நிலையில் இந்த சம்பவம் குறித்து மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நீதிவான் ஏ. யூட்சனின் கவனத்திற்கு சட்டத்தரணி க. சுகாஸ் கொண்டு சென்றார்.

அதன் போது இந்த நல்லாட்சி அரசாங்கத்திலும், சட்டவிரோதமான கைதுகள், தடுத்து வைப்புக்கள், கடத்தல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றனவா? இது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என மன்றில் சட்டத்தரணி க. சுகாஸ் விண்ணப்பம் செய்தார்.

அதனை தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைக்களை மேற்கொள்ளுமாறு நீதிவான் ஏ. யூட்சன் பொலிசாருக்கு உத்தரவிட்டார்.

அத்துடன் குறித்த வழக்கினை எதிர்வரும் 18ம் திகதிக்கு ஒத்திவைத்தார்

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here