பலாலிக் காணிகளை இராணுவம் கைவிடாது – சுமந்திரன்

பலாலி விமான நிலையத்தினைச் சூழவுள்ள பகுதிகளை விடுவிப்பது குறித்து முடிவுகள் எட்டப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட செயலகத்தில் வலி.வடக்கு காணி விடுவிப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று நடைபெற்றது.

இந்த கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

பலாலி விமான நிலையத்தினைச் சுற்றியுள்ள 4,000 ஏக்கர் காணிகளை விடுவிப்பது பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. நேற்றைய கூட்டத்தில் அந்த காணிகள் விடுவிப்பது தொடர்பான தீர்மானங்கள் எட்டப்படவில்லை.

விமான நிலையத்தின் விஸ்தரிப்பிற்கு மேலதிக காணிகள் தேவையா இல்லையா? என்பது தொடர்பான தரவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அந்த தகவல்களையும் வைத்துக் கொண்டு சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதா, அல்லது பிராந்திய விமான நிலையமாக மாற்றுவதா என்பது குறித்து முடிவுகள் எடுக்கப்படும்.

சர்வதேச விமான நிலையமாக மாற்றுவதாக இருந்தால், பொது மக்களுடனும் கலந்துரையாடி தனியார் காணிகள் சுவீகரிப்பதற்கான நிலைமைகள் இருப்பதன் காரணமாக மாற்று வழிகளை எடுக்கலாமா என்ற முடிவுகளை பின்னர் எடுக்க வேண்டும்.

இந்த கலந்துரையாடலில், இராணுவத்தினரிடம் இருக்கின்ற ஏனைய பகுதிகள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன. சில இடங்களை விடுவிப்பதாக தெரிவித்துள்ளார்கள்.

தனியார் காணி என்பது உறுதி செய்யப்பட்டுள்ளன. பல இடங்களில் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், அவை முடிவடையவில்லை.

அது குறித்து இராணுவத்தினர் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும், தனியார் காணிகளை விடுத்து அரச காணிகளில் பாதுகாப்பு கருதி இடங்கள் தேவைப்படின் அவைகளை இராணுவத்தினரிடம் வழங்க இணக்கம் காணப்பட்டுள்ளது.

காணிகள் குறித்த விபரத்தினை பிரதேச செயலாளர்கள் ஒரு வாரத்தில் அரசாங்க அதிபரிடம் கையளிப்பார்கள். பிரதேச செயலாளர்கள் தரவுகளை மாவட்ட செயலாரிடம் கையளித்த பின்னர் இராணுவத்தினருடன் கலந்துரையாடி, அதில் தடைகள் ஏதும் இருந்தால், அவற்றினை நீக்கி, பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அதன்பின்னர் பாதுகாப்பு படையினருடன் உயர்மட்ட கலந்துரையாடல் இடம்பெற்றதன் பின்னர் ஏனைய விடயங்களை கையாள முடியும்.

2009 போர் முடிவடைந்த பின்னர் 27,000 ஏக்கர் காணி படையினர் வசம் இருந்ததாகவும், தற்போது 4,700 ஏக்கராக குறைக்கப்பட்டுள்ளதாகவும், இராணுவத்தினர் சுட்டிக் காட்டியுள்ளனர்.

வலிவடக்கு பிரதேசத்தினைச் சூழ்ந்த பகுதியில் 12,000 ஏக்கர் ஆரம்பத்தில் இருந்துள்ளது. 2003ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா மற்றும் ஏனைய 2 இணைந்து உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்த போது, ஒருவர் உயிரிழந்துவிட்டார்.

மற்றவரின் காணி விடுவிக்கப்பட்டுள்ளது. மாவை சேனாதிராஜாவின் வழக்கு தற்போதும் நடைபெற்று வருகின்றது. அதில் படிப்படியாக சில இடங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

2007ஆம் ஆண்டு அனைத்து காணிகளும் மக்களுக்கு மீள்குடியேற்றத்திற்கு கையளிக்கப்பட வேண்டுமென்ற இடைக்கால உத்தரவினை பிறப்பித்திருந்தது.

அதற்கான படிமுறைகளை வகுத்திருந்தும் கூட 10 வருடங்களின் பின்னர் விடுவிக்கப்பட்ட பகுதிகள் மிகக்குறைவானவை.

மீள்குடியேற்றம், அல்லது சுமூக நிலை வருகின்ற போது, மக்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று வாழ வேண்டுமென்பது எமது அடிப்படை கோரிக்கை.

நல்லாட்சி அரசாங்கத்துடன் இணங்கிக் கொண்டிருந்த விடயமும் இது தான். கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, ஜனாதிபதி தனியார் காணிகள் விடுவிக்கப்படுமென்று வாக்குறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைவாக பாதுகாப்பு படையினருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றோம்.

முதலில், எந்தளவிற்கு இராணுவத்தினர் இணங்கி தனியார் காணிகளை விடுவித்து, தமது இடங்களை மாற்றி அமைக்கப்பட்டதன் பின்னரும், எவ்வளவு இடங்களை குறைக்க முடியுமென அவதானித்த பின்னர், அதிகளவான காணிகள் பாதுகாப்பு தரப்பினரிடம் இருக்குமாக இருந்தால், அடுத்த நடவடிக்கை என்ன என்பது பற்றி சிந்திக்க முடியும்.

மாவட்ட ரீதியாக நடைபெறும் கலந்துரையாடல்களின் பின்னர், அரசியல் தலைவர்களுடனும், அமைச்சர்களுடனும் நடைபெறவுள்ள உயர்மட்ட கலந்துரையாடல் தான், மிக முக்கியமாக இருக்கும்.

அவை தான் காணி விடுவிப்பு குறித்து உறுதியான முடிவுகளை எடுப்பதற்கான கலந்துரையாடலாக இருக்கும் என்றார்.

இதேவேளை இந்த கலந்துரையாடலில், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் சிவஞானம் சிறீதரன், சரவணபவன், தர்மலிங்கம் சித்தார்த்தன் உட்பட இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினர், பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here