ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்: நீதியான விசாரணைக்கு வலியுறுத்தல்

மட்டக்களப்பு, கல்குடாப் பிரதேசத்தில் ஊடகவியலாளர்கள் இருவர் தாக்கப்பட்டமையைக்  கண்டித்தும் நீதியான விசாரணையை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தியும், வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக இன்று  (24) ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. 

தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கம், அம்பாறை கிழக்கு சூரியன் அமைப்பு, மன்னார் மாவட்ட மீனவ ஒத்துழைப்பு இயக்கம் உள்ளிட்டவற்றின் ஏற்பாட்டில் இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட இரண்டு  சந்தேக நபர்கள், வாழைச்சேனை நீதவான் நீதமன்றத்தில் இன்றையதினம் ஆஜர்படுத்தப்பட்டனர். இந்நிலையிலேயே, மேற்படி ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படும் ஏனைய நபர்களையும் கைதுசெய்யுமாறு ஆர்ப்பாட்டக்கார்கள் வலியுறுத்தினர். கல்குடாவில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற மதுபான உற்பத்தி தொழிற்சாலை தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற மேற்படி ஊடகவியலாளர்கள் இருவர் மீது கடந்த மார்ச் மாதம் 21ஆம் திகதி சிலரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது நல்லதம்பி நித்தியானந்தன், புண்ணியமூர்த்தி சசிகரன் ஆகியோரே தாக்குதலுக்கு உள்ளாகினர். மதுபானசாலை உற்பத்திச் தொழிற்சாலைக்கான  நிர்மாணப்பணி இடம்பெற்றுவரும் இடத்தில் நின்ற சிலர், இவர்களைத் தாக்கியுள்ளனர். அத்துடன், அங்கிருந்து தப்பிச்செல்ல முற்பட்ட இந்த ஊடகவியலாளர்களை  சுமார் 6 கிலோமீற்றர் தூரம்வரை மோட்டார் சைக்கிள்களில் பின்தொடர்ந்து சென்று அவர்களைத் தாக்குவதற்கும் தாக்குதல்தாரிகள் முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் பொலிஸாரிடம் தாக்குதலுக்கு உள்ளான ஊடகவியலாளர்கள் முறைப்பாடு செய்த போதிலும், பொலிஸாரின் விசாரணையில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கூறினர்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகத்திலும் பாதிக்கப்பட்ட இரு ஊடகவியலாளர்களும் முறைப்பாடு செய்துள்ளனர்.
கல்குடாவில் 19 ஏக்கர் நிலப்பரப்பில் மதுபான உற்பத்தித் தொழிற்சாலை நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. இந்தத் தொழிற்சாலை அமைப்பதை நிறுத்துமாறு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here