இன்றைய ஹர்த்தாலில் பங்கு கொள்ளாத கிழக்கு மாகாணம்..

காணாமல்போன மக்களுக்கு ஆதரவு தெரிவித்து ஒரு இன ஒற்றுமையுடன் இந்த ஹார்த்தாலை நடத்த வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்குடன் ஹக்கீம் அணி மற்றும் ரிசாத் அணிகளை ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று தலைவர் சம்பந்தன் ஊடக அறிக்கை விட்டிருந்தார் .

இந்த ஹார்த்தாலுக்கு ஹக்கீம் ரிசாத் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அம்பாறை மாவட்டத்தில் வழமை போன்று வியாபார நிலையங்கள் திறக்கப்பட்டு வியாபாரம் களை கட்டியது. வழமையான போக்குவரத்து நடைபெற்றன. சகல அரச அலுவலகங்களும் திறக்கப்பட்டு இயங்கியது.

கிழக்கில் மட்டக்களப்பு நகரம் மட்டும்தான் கடையடைப்பு செய்துள்ளன. கிழக்கில் சகல அரச போக்குவரத்து சாலைகளும் வழமை போன்று பஸ் வண்டி சேவையை செய்திருந்தன. ஆனால் தனியார் போக்குவரத்துக்கள் நன்றாக குறைந்து காணப்பட்டன.

திருமலையில் கிண்ணியா மூதூர் புல்மோட்டை பகுதிகளில் வழமை போன்று நிலைமை.அதே போன்று பெருமளவு தமிழர் பகுதியும் வழமை போன்று

மட்டு மாவட்டம் ஓட்டமாவடி, ஏறாவூர், காத்தான்குடி போன்ற இடங்களில் வழமையான நிலைமைகள். இதவேளை மட்டக்களப்பு மாவட்டத்தின் பல தமிழ் ஊர்களிலும் வழமையான நிலைமைகள்.. ஆனால் வாழைச்சேனை முஸ்லிம் மக்கள் ஹார்த்தாலுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்கள்.

இதேவளை காத்தான்குடியில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படமாட்டாது என காத்தான்குடி வர்த்தக சங்க தலைவர் கே.எல்.எம்.பரீட் நேற்றே தெரிவித்துவிட்டார்.

ஹர்த்தால் அனுஷ்டிக்குமாறு எமது வர்த்தக சங்கத்துக்கு எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் கிடைக்கப்பெறவில்லை எனவும் நாளை வெள்ளிக்கிழமை காத்தான்குடியில் வர்த்தக விடுமுறை தினம் என்பதாலும் தொடர்ச்சியாக இரண்டு நாட்கள் கடைகளை மூட முடியாதெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

ஹக்கீமிடம் ஆதரவு கேட்டது உண்மையா?

தலைவர் சம்மந்தர் உண்மையாக ஹக்கீமிடம் பேசினாரா? ஹக்கீம் இதற்கு சம்மதம் சொன்னாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது .காரணம் கிழக்கில் எந்தவொரு முஸ்லிம் மக்கள் பிரதிநிதியோ அல்லது முஸ்லிம் அமைப்போ அல்லது முஸ்லிம் தலைவர்களோ சொல்லவுமில்லை ஒரு அறிவிப்பு கொடுக்கவுமில்லை சம்பந்தர் வெறும் ஊடக அறிக்கை மட்டும் விட்டால் ஹார்த்தால் நடை பெறுமா?

முதலாவது தமிழர் தரப்பு இந்த ஹர்த்தாலை நல்ல முறையில் வெற்றிகரமாக செய்து முடிக்கும் எண்ணம் இருந்திருந்தால் முஸ்லிம்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்று தமிழர் தரப்பு நினைத்திருந்தால் வெள்ளிகிழமை (நாளை) செய்திருக்க வேண்டும்..

மற்றது கிழக்கில் வாழும் மக்கள் நாங்கள் .எனவே தமிழர் தரப்பு எம்பிக்கள் அந்தந்த முஸ்லிம் அமைப்புக்கள் வர்த்தக சங்கள் கொண்ட பிரதிநிதிகளிடம் இந்த ஹார்த்தாலுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பேசியிருக்க வேண்டும். என்கின்ற கருத்து பலமாகவே உள்ளது .அதை விட்டு சும்மா ஒரு ஊடக அறிக்கை மட்டும் விட்டால் ஹர்த்தால் எப்படி நடக்கும்.

திட்டமிட்ட சதியா ?

தமிழர் தரப்பு ஹார்த்தாலுக்கு முஸ்லிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற ஒரு பிம்பம் இன்று ஏற்ப்பட்டுள்ளது இது தமிழ் மக்களையும் முஸ்லிம் மக்களையும் பிரிக்கும் நோக்கம் கொண்டு செய்யபட்ட சதியா ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

வெள்ளிகிழமை தவிர்ந்து முஸ்லிகளை வேறாக்கி தனிமைப்படுத்தி வடக்கு வேறு கிழக்கு வேறு என்று பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.

இது யார் குற்றம். சில அரசியல்வாதிகளின் கபட நாடகம் இன்னும் இன்னும் தமிழ் முஸ்லிம் மக்களை தனிமைப்படுத்தி காட்டப்பட்டுள்ளது. இதன் உள்நோக்கம் என்ன ?

திட்டமிடப்படாத ஹர்த்தால் இது .

இது மட்டுமல்ல புலிகள் இல்லாத எந்தவொரு ஹர்தாலும் இன்னும் வெற்றி பெறாமைக்கு முழுக் காரணம் தமிழர் தரப்புதான் .

இதில் எந்த இடத்திலும் முஸ்லிம் மக்களை குறை சொல்ல முடியாது. தமிழர் தரப்பு முஸ்லிகளை ஒதுக்கி ஓரம் கட்டிவிட்டுத்தான் எப்போதும் ஹர்த்தால் செய்து வருகின்றனர்.தமிழர் தரப்பின் நியாமான எந்த விடயத்திக்கும் முஸ்லிம் தரப்பு முழு ஒத்துழைப்பு வழங்கும் நிலையில்தான் உள்ளனர் .ஆனால் முஸ்லிம் அரசியல்வாதிகளின் ஒத்துழைப்பை மட்டுமே தமிழர் தரப்பு நம்பி இருப்பதால்தான் இந்த நிலைமை .

ஹக்கீம் ரிசாத் சொல்லி முஸ்லிம் பகுதிளில் ஹார்த்தால் வெற்றி பெறுவது கடினம் .கிழக்கில் மக்கள் அமைப்புக்களிடம் தமிழர் தரப்பு பேச வேண்டும் .அது அரசியல் என்றாலும் வேறு விடயங்கள் என்றாலும் முஸ்லிம் சிவில் அமைப்புகளிடம் பேசப்பட வேண்டும் .அதை விட்டு ஹக்கீமிடம் ரிசாதிடம் பேசினால் இப்படிதான் நடக்கும் .

கிழக்கில் புத்த சிலைகள்

இன்று முஸ்லிம் பகுதிகளில் புத்தர்சிலை பெருகி வருகின்றது .நாளை தமிழ் பகுதிகளிலும் வரும் அதனால் திடீரன்று முளைக்கும் புத்தர்சிலைக்கு எதிராக தமிழர் முஸ்லிம்கள் இணைந்து ஹர்த்தால் செய்ய வேண்டிய ஒரு நிலைக்கு இரண்டு இன மக்களும் தள்ளப்பட்டுள்ளார்கள்..

இப்படி பிரிந்து நின்று தமிழர் தரப்பு ஹர்த்தால் செய்யும் போது முஸ்லிகள் வேடிக்கை பார்ப்பதும் முஸ்லிம்கள் செய்யும் போது தமிழர் தரப்பு வேடிக்கை பார்ப்பதுமாக இருந்தால் சிங்கள அரசு எப்போதும் பெருத்த நன்மை பெறும் .

தமிழ் முஸ்லிம் ஒற்றுமை நோக்கி தமிழர் தரப்பு எந்தவொரு செயலிலும் இன்னும் ஈடுபடவில்லை.. இன்றைய ஹர்த்தாலுக்கு கிழக்கு முஸ்லிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்ற ஒரு தப்பான எண்ணம் கருத்து தமிழ் மக்களிடம் ஆழமாக பதிந்துள்ளது .இதை யார் துடைப்பார்கள்.

ஆக இன்னும் இன்னும் இந்த இரண்டு மக்களிடமும் விஷம் கலந்த ஒரு அரசியல் நாடகம் நடந்து வருகின்றது மட்டும் உண்மை .

சம்பந்தர் ஹக்கீமை நம்பி தொடர்ந்து ஏமாந்து வருவது நல்லதில்ல. ஹர்த்தால் செய்யுமாறு ஹக்கீம் யாருக்கும் சொல்லவில்லை ஹக்கீம் ஒரு நாளும் அரசுக்கு எதிராகவோ அல்லது தமிழர் தரப்புக்கு ஆதரவாகவோ ஒரு நாளும் இந்த கெட்ட வேலையில் இறங்க மாட்டார் .

அவர் ஒரு நாளும் தமிழர் தரப்போடு ஒத்து வரமாட்டார் எனபது சம்பந்தருக்கு தெரியாதா ? தெரிந்துமா இன்னும் சம்பந்தர் ஹக்கீமிடம் பேசினோம் ,ஹக்கீம் தரப்பு ஆதரவு தந்துள்ளது என்பது ஏற்புடையதா ?

ஹக்கீம் சிங்கள பகுதில் பிறந்து வளர்ந்தவர் .அவர் ஒருபோதும் சிங்கள மக்களையும் சிங்கள அரசியலையும் முகம் சுளிக்கும் அளவுக்கு நடந்து கொள்ளமாட்டார்.

தமிழர் தரப்பு எப்படிப் போனாலும் பிரச்சினை இல்லை முஸ்லிம் மக்கள் என்ன ஆனாலும் பரவாயில்லை என்று நிற்கும் அரசியல்வாதி ஹக்கீம் . இது சம்பந்தருக்கு தெரியாமல் இருக்குமா? தெரிந்தும் ஏன் இந்த நம்பிக்கை??

-எழுத்தாளர்  M.M.Nilamdeen-

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here