அழிவுக்கு அடித்தளம் இட்டவர் மகிந்த தான்: ரவி கிருஷான் ஜயவர்தன

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு உறுப்பினர்களைச் சேர்க்கும் அதிகாரம் எவ்விதத்திலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிற்கு கிடையாது என அக்கட்சியின் இளைஞர் முன்னணியின் தேசிய அமைப்பாளர் ரவி கிருஷான் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளர்களை ஜனாதிபதி அண்மையில் நீக்கியது சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிக்கை ஒன்றை வெளியிட்டு, சிறிகொத்தவின் தேவைக்கு அமைய தற்போது கட்சியை அழித்து வருவதாக கூறியுள்ளார்.

எனினும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அழிவுக்கு மகிந்த ராஜபக்சவே ஆரம்ப அடித்தளத்தை இட்டார்.

அத்துடன் மகிந்த ராஜபக்ச தனது தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக கட்சியினர் சிலரை பழிவாங்கினார்.

இந்த நிலையில், கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான குமார வெல்கம, விதுர விக்ரமநாயக்க ஆகியோரையும் தொகுதி அமைப்பாளர்கள் பதவிகளில் இருந்து நீக்கி விட்டு, அவர்களுக்கு பதிலாக இளம் அமைப்பாளர்களை நியமிக்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாகவும் கிருஷான் ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here