இருவரை கொன்ற மகிந்த? : தப்பிக் கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை

முன்னாள் ஜனாதிபதிக்கு பொய்களைப் பரப்பி நாட்டு மக்களை குழப்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுப்பதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

இன்றைய தினம் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறினார். மேலும் தொடர்ந்து அவர் கூறுகையில்,

நாடு இப்போது இருக்கும் நிலைக்கு முக்கிய காரணம் மகிந்த ராஜபக்சவே என நான் தெளிவாக கூறிக்கொள்கின்றேன்.

ஆனால் மே தினக் கூட்டங்களிலும் வேறு இடங்களுக்கும் செல்லும் மகிந்த, பொய்களைப் பரப்பிக் கொண்டு இருக்கின்றார். நாட்டின் கடன்களைப் பற்றியும் அபிவிருத்தி பற்றியும் கருத்துகளை வெளிப்படுத்துகின்றார்.

கடந்த கால ஆட்சியில் மொத்தமாக 10400 பில்லின்கள் கடன்களாக பெறப்பட்டுள்ளது. இந்த கடன்களுடனேயே நாட்டை எம்மிடம் ஒப்படைத்தார்கள். ஆனால் இப்போது நல்லவரைப் போல் கருத்து தெரிவிக்கின்றார் மகிந்த.

19700 கோடிகள் அம்பாந்தோட்டையில் மகிந்தவினால் நட்டம் ஏற்பட்டது, 39000 கோடிகளை மத்தள விமான நிலையத்திற்கு செலவு செய்தார் ஆனால் 5 இலட்சம் கூட மாத வருமானம் வருவதில்லை.

இவ்வாறு அவர் தன் இலாபத்திற்காக போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் ஏற்பட்ட நட்டங்களையும், அவர் பெற்றுக் கொண்ட கடன்களையுமே இப்போது செலுத்திக் கொண்டு வருகின்றோம்.

மகிந்தவிற்கு நான் நேரடியாகக் கூறுகின்றேன் நீங்கள் எங்கிருந்தாலும் சரி நாங்கள் அங்கு வருகின்றோம் இந்த விடயத்தில் தப்பிக் கொள்ள பார்க்காதீர்கள் பெற்ற கடன்கள் பற்றிய உண்மைகளைக் கூறுங்கள்.

நாட்டை இல்லாமல் செய்து, பொருளாதாரத்தை முற்றாக அழித்து விட்டே நாடு எமக்கு ஒப்படைக்கப்பட்டது ஆனால் இப்போது பொய்களைப் பரப்பிக் கொண்டு வருகின்றார் மகிந்த.

அதேபோல் கடந்த காலத்தில் வெள்ளைவான் கடத்தல், கொலைகளையும் செய்தவர் மகிந்த அதனைப்பற்றி யாராவது பேசுகின்றார்களா?

லசந்தவை கொன்றது யார்? எக்னலிகொட எங்கே? தாஜுதீனை கொன்றது யார்? இவை பற்றி எவரும் பேசுவது இல்லை. இந்த கொலைக் கலாச்சாரத்தை இன்றும் மகிந்த தொடர்ந்து கொண்டு வருகின்றார்.

மேதினக் கூட்டத்தில் இரு உயிர்களை கொன்றார். இன்று அவர்களின் குடும்பத்தார் கூறுகின்றனர் பணத்திற்காக இறந்து போனதாக. அப்பாவிகளை தனது இலாபத்திற்காக கொன்று விட்டார் மகிந்த.

இப்படியாக அனைத்து குற்றங்களையும், ஊழல்களையும் செய்து விட்டு இப்போது நல்லவர்களைப் போல மக்கள் மத்தியில் பிரச்சாரங்களைச் செய்து கொண்டு வருகின்றார்.

அவர் தரப்பில் இருக்கும் எவரும் அந்த ஊழல்களையும், திருட்டுகளையும், கொலைகளையும் பற்றி பேசுவதில்லை. இவ்வாறான திருடர்களே இப்போது நாட்டின் பொருளாதாரத்தை பற்றி கருத்து தெரிவிக்கின்றனர்.

இந்த பொய்களை நிறுத்திக் கொள்ளவேண்டும். தனது இலாபத்திற்காக மகிந்த மக்களை குழப்புவதனையும் நிறுத்திக் கொள்ளவேண்டும் எனவும் நான் பகிரங்கமாக தெரிவித்துக் கொள்கின்றேன் எனவும் ரவி கருணாநாயக்க கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here