250 ரூபாவை மாதாந்த சம்பளமாக பெற்ற வடமாகாண சிரேஷ்ட பொலிஸ்

“நான் பொலிஸ் சேவையில் இணைந்த ஆரம்ப காலக்கட்டத்தில் 250 ரூபா தான் மாதாந்த சம்பளமாகக் கிடைத்தது” என வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரால் வீதிப் போக்குவரத்துக் கடமையில் ஈடுபடும் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரிப் பாடசாலை மாணவிகளுக்கான அங்கிகள் இன்று புதன்கிழமை(03) வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வு இன்று காலை-07.45 மணியளவில் கல்லூரியின் பிரதான மண்டபத்தில் இடம்பெற்ற போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

தமிழ் இளைஞர், யுவதிகள் பொலிஸ் சேவையில் இணைந்தால் அவர்களுக்கு திருமணம் இடம்பெறாது என்று சொல்லும் ஒரு காலக்கட்டமிருந்தது. ஆனால், அந்த காலக்கட்டம் தற்போது மாறிவிட்டது.

தற்போது எங்களுடைய பொலிஸ் திணைக்களங்களில் 5000 வரையான தமிழ்ப் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள் காணப்படுகின்றன.

அடுத்த மாதம் 03 ஆம் திகதி 1500 தமிழ்ப் பொலிஸார் பொலிஸ் திணைக்களங்களுக்குள் சேவைக்காக உள்வாங்கப்படவுள்ளனர்.

ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு 55 ஆயிரம் ரூபா வரையான சம்பளம் வழங்கப்படவுள்ளது.

இன்று தமிழ்ப் பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலையங்களில் தமிழ்ப் பெண்களின் முறைப்பாட்டை பதிவு செய்வதற்கு தமிழ் மொழி பேசும் பெண் உத்தியோகத்தர்கள் காணப்படாமை பாரிய குறைபாடாக உள்ளது.

இந்த நிலைமை தொடர்வது எமது சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. எங்களுடைய தமிழ் மக்களுக்காக சேவை செய்யும் நோக்குடனாவது எங்கள் இளைஞர், யுவதிகள் ஒவ்வொருவரும் தங்களைப் பொலிஸ் சேவையில் இணைத்துக் கொள்ள வேண்டும் என்றார். 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here