பேஸ்புக் வழங்கும் அரிய சந்தர்ப்பம் : 3000 புதிய பணியாளர்கள் தேர்வு

பேஸ்புக் உலகம் முழுவதும் 150 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை கொண்டுள்ள சமூகவலைதளமாக உள்ளது. காலமாற்றத்திற்கேற்ப தேவையான அப்டேட்களை பயனாளர்களுக்கு வழங்கி வருகிறது. இதில் லைவ் வீடியோ வசதியும் ஒன்று. சமீபத்தில் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து நாடுகளில் கொலை செய்வதை லைவ் வீடியோவாக கொலையாளிகள் ஒளிபரப்பினர். இது அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

மேலும், சில நாடுகளில் தற்கொலை செய்வோர் தங்களது தற்கொலைகளை லைவ்-ஆக ஒளிபரப்பினர். இது குறித்து வந்துள்ள புகார்களை பரிசீலித்த பேஸ்புக் நிர்வாகம் மேற்கண்ட லைவ் வீடியோக்கள், கொலை, விபத்து மற்றும் வன்முறை வீடியோக்களை கட்டுப்படுத்த கூடுதல் பணியாளர்களை நியமிக்க முன்வந்துள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஸக்கர்பெர்க் வெளியிட்டுள்ளார். அதன்படி, 3000 புதிய பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் மூலமாக மேற்கண்ட வீடியோக்களை கட்டுப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பயனாளிகளால் பதிவேற்றப்படும் வீடியோக்களில் முகம்சுளிக்கக் கூடிய வகையிலான வீடியோக்களை வலைதளத்திலிருந்து நீக்கவும் அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வரும் காலங்களில் இது போன்ற வீடியோக்களை கட்டுப்படுத்தி, நீக்க மேம்பட்ட தொழில்நுட்பத்தை விரைவில் உருவாக்க இருப்பதாகவும் மார்க் ஸக்கர்பெர்க், முதலீட்டாளர்களுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here