மே தினத்தை தனித்து நடத்திய மகிந்தவிற்கு சிக்கல்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடத்திய மே தினக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட முக்கிய நபர்களுக்கு எதிராக அதிக பட்சம் என்ன நடவடிக்கை எடுக்க முடியுமோ அவற்றை எடுப்போம் என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் பொழுதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ஜனநாயகத்துக்கு அதிக மதிப்பளிக்கப்படும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் தீர்மானம் எடுப்பது, ஜனாதிபதியோ, வேறு தனிநபர்களோ அல்ல.

மத்திய செயற்குழுவே இந்த தீர்மானங்களை இடுக்கும். இந்நிலையில், கட்சியின் மே தினக் கூட்டத்தில் கட்டாயம் கலந்துகொள்ள வேண்டும் எனத் தீர்மானம் எடுத்து கடிதம் அனுப்பியது மத்திய செயற்குழு.

ஆனால் இதில் பலர் கலந்து கொள்ளாமல் வேறு கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள். அதாவது கட்சி எடுக்கும் முடிவிற்கு மாறாகச் செயற்பட்டுள்ளார்கள்.

எனவே, எமது கட்சி ஒழுங்கு செய்த மே தினக் கூட்டத்திற்கு வராதவர்களுக்கு என்ன நடவடிக்கை எடுப்பது என்பதையும் மத்திய செயற்குழுவே தீர்மானிக்க வேண்டும். அதனை நாம் செய்வோம்.

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மே தினக் கூட்டத்துக்கு சமூகமளிக்காமல், கூட்டு எதிர்க் கட்சியின் காலிமுகத்திடல் கூட்டத்தில் சமூகமளித்தமை தொடர்பில், கட்சியின் போஷகர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட இன்னும் பலருக்கு எதிராக எடுக்க முடியுமான அதிகபட்ச நடவடிக்கையை கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானிக்கும் என்றார்.

நேற்று முன்தினம் காலி முகத்திடலில், மகிந்த ராஜபக்ச தலைமையில் கூட்டு எதிர்க் கட்சியினர் மேதினக் கூட்டத்தினை நடத்தியிருந்தனர்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அணி கண்டியிலும் மேதினக் கூட்டத்தினை நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here