சுகாதார தொண்டர்களின் நியமனத்தை வழங்குமாறு கோரி ஜனாதிபதிக்கு கடிதம்

சுகாதார தொண்டர்களாக பணியாற்றிய காலப்பகுதியின் அடிப்படையில் நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரி வடக்கில் சுகாதார தொண்டர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளனர்.

நிரந்தர நியமனம் வழங்கக்கோரி வவுனியாவில் சுகாதார தொண்டர்கள் 51 பேர் முன்னெடுத்து வரும் போராட்டம் இன்று நான்காவது நாளாகவும் தொடர்கின்றது.

குறித்த கடிதத்தில்,

சுகாதாரத் தொண்டர்களாகிய நாம் 1994ஆம் ஆண்டு தொடக்கம் யுத்த காலத்தில் மற்றும் நலன்புரி நிலையங்கள் முதல்கொண்டு இன்று வரை எதுவித வேதனமுமின்றி தொண்டர் அடிப்படையில் நிரந்தர நியமனத்தை எதிர்பார்த்து செயற்பட்டு வருகின்றோம்.

இந்த நிலையில் கடந்த 2015.03.21 அன்று நிரந்தர நியமனம் வழங்கும் போது நிறுவனம் ஒன்றின் கொடுப்பனவுடன் கடமையாற்றிய தொண்டர்களுக்கு இந்த சமயம் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டது.

இருந்த போதும் தகுதியிருந்தும் 2015ஆம் ஆண்டு நிரந்தர நியமனம் எமக்கு கிடைக்கவில்லை. அடுத்த கட்டத்தில் நிரந்தர நியமனம் வழங்குவதாக வாக்குறுதி வழங்கப்பட்டது.

தற்போது கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் 06 பாடங்கள் சித்தியடைய வேண்டும் என்ற காரணத்தை கூறி இம்முறையும் நிரந்தர நியமனம் வழங்குவதிலிருந்து தட்டிக்கழிக்க முயற்சிக்கின்றனர்.

வடமாகாணத்தைப் பொறுத்தவகையில் கடந்த 30 வருடகாலமாக நடைபெற்ற யுத்த காரணத்தினால் எங்களின் கல்வியை சரியாக தொடரமுடியவில்லை.

எனவே சுகாதார தொண்டர்களாக சேவையாற்றிய காலப்பகுதியின் அடிப்படையில் நிரந்தர நியமனத்தை வழங்கவும் என்தோடு, கடந்த கால ஆட்சேர்ப்பு முறைப்படி சுகாதாரத் தொண்டர்களின் நிரந்தர நியமனத்தை அரசு கவனத்தில் கொள்ளவேண்டும்.

சுகாதாரத் தொண்டர்களின் சுகாதார சேவைகளை அதிக கல்வித் தகுதி பாராது அனுபவரீதியான சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கவும், சுகாதார சேவை உதவியாளர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு புதிய ஆண் சேவையாளர்களை உள்வாங்காது தற்போது பல வருடங்களாக சுகாதார சேவையில் தொண்டாற்றிய பெண் சுகாதார தொண்டர்களை உள்வாங்க வேண்டும்.

மேலும் வடமாகாண சபையினால் மத்திய அரசாங்கத்திற்கு புதிய சுற்றுநிரூபத்தின் படி சேவைக்கால அடிப்படையில் சுகாதாரத் தொண்டர்களை நிரந்தர நியமனம் வழங்குவதற்கான சிறப்பு பிரேரணை மனுமூலம் ஆட்சேர்ப்பு நடவடிக்கையை செய்வதற்காக நடவடிக்கை எடுக்க ஒழுகுகள் செய்ய வேண்டும்.

சுகாதார துறை சம்பந்தப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடாக வரும் சுகாதாரத் தொண்டர்களின் பெயர்ப்பட்டியலின் படி நிரந்த நியமனம் வழங்கும் போது அவர்களை மட்டும் உள்வாங்கவும், அரசியல் செல்வாக்குள்ள சில அரசியல் பிரதிநிதிகளினால் சுகாதார சேவைக்காக வரும் பெயர் விபரங்களுக்கு நிரந்தர நியமனம் வழங்க வேண்டாம்.

வயது எல்லை பாராது சேவைக்கால அடிப்டையில் நிரந்தர நியமனம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவும், நல்லாட்சி அரசே சுகாதாரத் தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் கொடுங்கள், ஜனாதிபதியின் சாதகமான முடிவு வரும் வரை எமது கவனயீர்ப்பு போராட்டம் வடமாகாணத்தில் தொடரும்.

நாம் எமது கோரிக்கைகளுக்கு நல்லாட்சி அரசாங்கத்தில் எமது சேவைக்கான முடிவு வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here