துணைவேந்தர் பதவியைக் கைப்பற்ற அரசியல்வாதிகளின் கால்களில் விழுவதா?

யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் தெரிவு தொடர்பாக யாழ். மறைமாவட்ட ஆயர் வண. ஜஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் ஆண்டகை கடும் விசனம் வெளியிட்டுள்ளார்.

முதலாவதாக தெரிவு செய்யப்பட்டவரை விட அடுத்த நிலையில் உள்ளவர் அரசியல்வாதிகளின் கால்களில் விழுந்து துணைவேந்தராக வந்திருக்கின்றார் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

துணைவேந்தர்கள் இவ்வாறு அரசியல்வாதிகளின் கால்களில் வீழ்ந்து பதவிக்கு வந்தால் மாணவர்கள் மதிப்பார்களா? விரிவுரையாளர்கள் மதிப்பார்களா? என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

அரசியல் தலையீடுகளால் புத்திஜீவிகள் புறக்கணிக்கப்படுகின்றனர். புத்தி சாதூரியம் மிக்கவர்கள் பொறுப்புகளில் அமர்கின்றனர் எனவும் அவர் தெரிவித்தார்.

யாழ். புனித சாள்ஸ் மகா வித்தியாலயத்தின் 140 ஆவது ஆண்டு நிறைவு விழா சனிக்கிழமை இடம்பெற்றது. அங்கு பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே யாழ். ஆயர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய ஆயர்,

ஒவ்வொரு பாடசாலைகளும் ஒவ்வொரு தனித்துவத்துடன் இயங்க வேண்டும். இருக்கின்ற வளங்களை வைத்து அவை முன்னேற வேண்டும். மாணவர்கள் கல்வி கற்பதற்கு முன்னர் சிறந்த பண்புகளை பழக வேண்டும்.

ஆசிரியர்களின் பண்புகளே மாணவர்களுக்குள் விதைக்கப்படுகின்றன. அதனால் அதிபர், ஆசிரியர்கள் நல்ல மாணவர்களை உருவாக்க வேண்டும். இது கடினமான பணியாகும்.

நாம் இப்போது புத்திஜீவிகளை இழந்து கொண்டிருக்கிறோம். புத்திசாதுரியமானவர்கள் அரசியல் பின்னணியுடன் செயற்படுகின்றனர்.

தெற்கில் இருந்துதான் எமக்குப் பின்னடைவுகள் வருகின்றன என்றில்லை. நாங்களே எமக்குக் குழி தோண்டுகின்றோம். யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற துணைவேந்தர் நியமனம் இதை எடுத்துக் காட்டுகின்றது.

பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்கள் தொழில்வாய்ப்புக்காக போராடுகின்றனர். தாங்கள் சுயதொழில் செய்து முன்னேற முடியாதா என்பதை போராட்டத்தில் ஈடுபடும் பட்டதாரிகள் சிந்திக்க வேண்டும்.

தாங்களாகவே எந்தவொரு செயலையோ, தொழிலையோ செய்யும் பண்பை பல்கலைக்கழகம் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்கவில்லை என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here