மட்டு. மக்களின் வாழ்வாதாரத்திற்கு வழங்கிய நிதி எங்கே?

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கடந்தவருடம் மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக வழங்கப்பட்ட நிதி இன்றுவரை செலவு செய்யப்படவில்லை என தெரியவந்துள்ளது.

குறிப்பாக மீள்குடியேறிய மக்களின் வாழ்வாதாரத்திற்காக புனர்வாழ்வு அமைச்சினால் வாழ்வாதார மேம்பாட்டிற்காக வழங்கப்பட்ட நிதி இதுவரை உரிய பயனாளிகளுக்கு உதவிகளாக வழங்கப்படவில்லை என தெரியவந்துள்ளது.

கடந்த வருடம் தங்களது வாழ்வாதாரத்திற்காக பால்பசு வளர்ப்பு திட்டத்தில் கறவைபசுக்கள் வழங்குவதாக அரச அதிகாரிகள் உறுதியளித்திருந்தும் இதுவரை தமக்கு உரிய உதவிகள் கிடைக்கவில்லை என பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பாக அரச அதிபரின் கவனத்தில் கொண்டு வந்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிவித்துள்ளனர்.

ஆறு மாதகாலமாக ஏமாற்றப்படும் பயனாளிகள்

கடந்த 2016 ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் திகதிக்கு முன்னர் வழங்கப்படவேண்டிய கறவை பசுக்களை மாவட்ட செயலகம் வழங்கத் தவறியுள்ளது.

அத்துடன், கறவைப்பசுக்களுக்கு பதிலாக கோழி, ஆடு போன்றவற்றை பயனாளிகளுக்கு வாங்கி கொடுக்குமாறு பிரதேச செயலகங்களுக்கு வேண்டுகோள் விடுத்தபோதும்,

காலம் நிறைவடைந்ததன் காரணமாக அதனை செயற்படுத்த முடியாது என கூறி பல பிரதேச செயலாளர்கள் காசோலையை மாவட்ட செயலகத்திற்கு திருப்பியனுப்பியுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனால் குறித்த திட்டம் இன்றுவரை நடைமுறைப் படுத்தபடவில்லை என தெரிவித்துள்ளனர்.

உயிரிழக்கும் கோழி ஆடுகள்

குறித்த திட்டத்தின் ஊடாக சில பிரதேச செயலாளர் பிரிவுகளில் வழங்கப்பட்ட கோழி மற்றும் ஆடுகள் உரிய தரத்தில் இல்லாததன் காரணமாக அவை உயிரிழந்து விட்டதாகவும், அது குறித்த மீளாய்வுகள் விசாரணைகள் இன்னும் செய்யப்படவில்லை எனவும் பயனாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

திட்டம் நிறைவடைந்ததாக அறிக்கை அனுப்பிய மாவட்ட செயலகம்

மீள்குடியேற்ற அமைச்சின் ஊடாக கடந்த வருடம் வழங்கப்பட்ட குறித்த வாழ்வாதாரத் திட்டம் நிறைவடைந்து, அதற்கான நிதிகள் செலவு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படும் முன்னேற்ற அறிக்கையானது 100 வீத பௌதீக முன்னேற்றத்துடன், 2016 ஆம் ஆண்டே இறுதிக் கணக்கு முடிக்கப்பட்டுவிட்டது என தெரிவித்து அரசாங்கத்திற்கு மாவட்ட செயலகத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

மாவட்ட அபிவிருத்தி குழுவின் அசமந்த போக்கு

குறித்த திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்படாமைக்கும் அதன் பயனாளிகள் இத்திட்டத்தின் ஊடாக பயனடையாமல் போனதற்கும் மாவட்ட அபிவிருத்தி குழுவும் அதில் உள்ள தலைமைகளுமே காரணம் என பொது மக்கள் குற்றம சுமத்தியுள்ளது.

குறித்த திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகளை ஆராயாது அத்திட்டம் ஆறுமாத காலமாகியும் நிறைவடையாத நிலையில் அது நடைபெற்றதாக அரசுக்கு காட்டுவதற்கு மாவட்ட அபிவிருத்தி குழு துணைபோனது ஏன்?

பொதுமக்களுக்காக பணியாற்ற வேண்டிய அரசியல் தலைமைகள் அதிகாரிகளை காப்பாற்ற செயற்படுகிறார்களா என்ற சந்தேகத்தை இந்த திட்டம் மக்கள் மத்தியில் உருவாக்கியுள்ளது.

1000 வீட்டு திட்டம் கொண்டுவந்ததற்காக உரிமை கோரி ஏட்டிக்கு போட்டியாக அறிக்கை விடும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் குறித்த வாழ்வாதார திட்டம் நடைமுறைப்படுத்தாததற்கு யார் காரணம் என்ற உண்மைகளை வெளியிடுவார்களா?

இத்திட்டம் நடைமுறைப் படுத்தப்பட்டாதக கூறி அரசுக்கு அறிக்கை அனுப்பி அரசாங்கத்தையும் பொதுமக்களையும் ஏமாற்றியது யார்? போன்றவற்றிற்கு மாவட்ட அபிவிருத்தி குழுவின் தலைமைகள் பதில் வழங்குவார்களா? என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும் பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here