முன்னாள் போராளிகளின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட வேண்டும்

முன்னாள் போராளிகளின் பாதுகாப்பை பிரதானமாகக் கொண்டே புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதென, அக் கட்சியின் தலைவர் கே.இன்பராசா தெரிவித்துள்ளார்.

அத்தோடு, மக்களது பிரச்சினைகளையும் வெளிக்கொணர்ந்து தாமாகவே அரசியல் நீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சி ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தொடர்பாக ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு, புதுக்குடியிருப்பில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை நடைபெற்றது. இதன்போதே அதன் தலைவரான இன்பராசா இவ்விடயத்தைக் குறிப்பிட்டார்.

முன்னாள் போராளிகள் மட்டுமன்றி, பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள், அரசியல் கைதிகள், போரால் பாதிக்கப்பட்ட மக்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் யுத்தத்தின் பின்னர் அனுபவித்து வரும் துன்பங்கள் வேதனைக்குரியன எனக் குறிப்பிட்ட அவர், இவற்றிற்கு எந்தவொரு அரசியல் கட்சியோ அல்லது அரசியல் தலைவரோ தீர்வை பெற்றுத்தராத காரணத்தினாலேயே இவ்வாறான ஒரு கட்சியை ஆரம்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டதென்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இதுவரை காலமும் முன்னாள் போராளிகள் கைதுசெய்யப்பட்டபோது அவர்களுக்காக குரல்கொடுக்க யாரும் முன்வரவில்லையென்றும், இனிவரும் காலத்தில் அவ்வாறான கைதுகள் இடம்பெற்றால் அவர்களுக்காக குரல்கொடுப்போம் என்றும் இன்பராசா மேலும் தெரிவித்தார்.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here