யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியாவின் கொலை வழக்கு கொழும்பிற்கு மாற்றப்படுவதானது ஜனாதிபதி மைத்திரிபால சிறினேவின் வாக்குறுதியை மீறும் செயல் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புங்குடுதீவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு விசாரணைகள் கொழும்பு மேல் நீதி மன்றத்திற்கு மாற்றுவதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து புங்குடுதீவு பகுதி மக்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

புங்குடுதீவு கந்தசாமி கோவிலடியில் இருந்து இன்று மாலை நான்கு மணியளவில் எதிர்ப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகள் தாங்கியவாறு பேரணியாக நடந்து புங்குடுதீவு 11வட்டாரம் ஆலடி சந்திவரை சென்றுள்ளனர்.

இந்த போராட்டத்தில் ஈடுபட்டிருந்த மக்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

வித்தியாவின் படுகொலை வழக்கானது ரயலட்பார் முறையில் யாழ்.மேல் நீதிமன்றிலேயே இடம்பெற வேண்டும்.

மாணவி வித்தியா கொலை சம்பவம் இடம்பெற்ற இடமானது யாழ்ப்பாண மேல் நீதிமன்ற எல்லைக்குட்பட்ட பகுதியாக உள்ள நிலையில், தற்போது எதற்காக வழக்கு கொழும்பு நீதிமன்றுக்கு மாற்றப்பட வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும், யாழ்.மேல் நீதிமன்றின் நீதித் தன்மை கேள்விக்குள்ளாகியுள்ளதாகவும் மக்கள் கூறியுள்ளனர்.

குறித்த சம்பவம் இடம்பெற்றதும் யாழிற்கு வந்திருந்த ஜனாதிபதி ,சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணத்தில் விஷேட நீதிமன்றம் அமைத்து நீதி வழங்குவதாக தெரிவித்திருந்த நிலையில், தற்போது குறித்த வழக்கை கொழும்புக்கு மாற்றுவதானது ஜனாதிபதி கூறிய வாக்குறுதியை மீறுகின்ற செயற்பாடு எனவும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த வகையில் ஜனாதிபதி கூறியது போன்று யாழ்ப்பாணத்திலே குறித்த விஷேட நீதிமன்றத்தை அமைத்து திருகோணமலை, யாழ்ப்பாணம் போன்ற இடங்களிலுள்ள தமிழ் நீதிபதிகளை நியமித்து வழக்கை விசாரணை செய்து தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் மக்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

இதேவேளை, வழக்கை கொழும்புக்கு மாற்றாமல் இருக்க இங்குள்ள அரசியல்வாதிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மக்கள் கேட்டுள்ளனர்.