நான் வழங்குவது இலஞ்சம் என்றால் யோகேஸ்வரன் எம்.பி. வழங்குவது என்ன?

மக்களுக்கு நான் செய்யும் உதவி இலஞ்சம் என்று பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் தெரிவித்தால் ஏனைய அரசியல்வாதிகள் வழங்கும் உதவி என ஐக்கிய தேசிய கட்சியின் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் ஆறுமுகம் ஜெகன் கேள்வி எழுப்பியுள்ளார்.

கல்குடா நந்தவனம் சுற்றுலா விடுதியில் இன்று(13) மாலை நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்குறிப்பிட்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

எனது அரசியல் நடவடிக்கைக்காக நான் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கு ஒரு டயர் உதவி வழங்கினேன். முடிந்தால் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் இரண்டு டயர் கொடுக்கட்டும், அவ்வாறு கொடுத்தால் நான் மூன்று டயர் வழங்குவேன்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இல்லாத காரணத்தால் அதிகுறைந்த விருப்பு வாக்கு ஆசனம் உள்ளது. அதனை கைப்பற்றுவதற்கே நான் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

நான் இன்றும் பல உதவிகளை வழங்குவேன். ஆனால் எனக்கும் எதனோல் தொழிற்சாலைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எதிர்காலத்தில் பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கான பல உதவிகளை மேற்கொண்டு வருகின்றேன்.

நான் மக்களுக்கு செய்யும் உதவி இலஞ்சம் என்று பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கூறினால் ஏனைய அரசியல்வாதிகள் மக்களுக்கு வழங்கும் உதவி அல்லது அவர் வழங்கும் உதவி என்ன என்பதை நான் கேட்க விரும்புகின்றேன்.

நான் கட்டட ஒப்பந்தம் செய்வதால் எதனோல் தொழிற்சாலைக்கும் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. தொழிற்சாலை சுற்றுமதில் அமைக்கும் வேலையை மேற்கொண்டேன்.

பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கூறுகின்றார் கல்குடா தொகுதி அமைப்பாளர் என்று சொல்லி கொண்டு திரிபவர் தான் செய்கின்றார் என்று. அவ்வாறு இல்லை நான் கல்குடாத் தொகுதி அமைப்பாளர் என்று பிரதமரினால் வழங்கப்பட்ட கடிதம் என்னிடம் உள்ளது.

ஆனால் கல்குடாவில் அமைக்கப்பட்டு வரும் எதனோல் தொழிற்சாலை தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சிக்கும், எங்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என அவர் தொடர்ந்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here