13ஆவது நாளாகவும் தொடரும் இரணைதீவு மக்களின் போராட்டம்

கிளிநொச்சி, இரணைதீவு மக்கள் சொந்த ஊரிற்கு செல்ல அனுமதிக்குமாறு கோரி முன்னெடுத்து வரும் போராட்டம் 13ஆவது நாளாகவும் இன்று தொடர்கிறது.

இந்த நிலையில், யுத்தம் நிறைவு பெற்று ஏழு ஆண்டுகளும், இந்த கிராமத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு 26 ஆண்டுகளும் கடந்துள்ளது.

இருப்பினும் இது வரையில் சொந்த நிலத்தில் சென்று வாழ்வதற்கான அனுமதிகளோ அல்லது தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுமதிகளோ எங்களுக்கு வழங்கப்படவில்லை. அதற்கான அனுமதிகளை இந்த நல்லாட்சி அரசு ஏற்படுத்தி தர வேண்டும்.

எவரிடமும் கையேந்தி வாழாத, நாள் ஒன்றுக்கு இரண்டு வகையான கடல் தொழில் வளம் கொண்ட எமது மண்ணில் தங்கி நின்று தொழில் செய்வதற்கான அனுமதிகளை பெற்று தரவேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரியுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள இரணைதீவு எனும் கடற்தொழில் கிராமத்தில் கடந்த பல தலைமுறைகளாக வாழ்ந்த 240 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் கடந்த 1990ஆம் ஆண்டு ஏற்பட்ட யுத்தம் காரணமாக அங்கிருந்து முற்றாக வெளியேற்றப்பட்டன.

கடந்த 1990ஆம் ஆண்டு இரணைதீவின் பெரியதீவில் இருந்து 190 குடும்பங்களும் சின்னத்தீவில் 50 குடும்பங்களும் என 240 குடும்பங்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட மக்கள் முழங்காவில் பிரதேசத்தின் குறித்த பகுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு இரணைமாதா நகர் என்ற கிராமம் உருவாக்கப்பட்டு கடந்த 26 வருடங்களாக இரணைதீவு மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த நிலையிலேயே தமது பூர்வீக இடத்திற்குச் செல்லவும் அங்கு நின்று தொழில் செய்யவும் அனுமதி கோரி மக்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here