தமிழ் மொழிக்கான அதிகாரிகளை நியமிப்பதில் இழுத்தடிப்பு!

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கு தனித்தனியே தமிழ் மொழிகளுக்கான கரையோரம் பேணல் உதவிப் பணிப்பாளர்கள் நியமனத்தில் கடந்த 2 வருடங்களாக உத்தியோகபூர்வமான தமிழ் நியமனம் செய்யாது, சிங்கள அதிகாரிகளை நியமிக்கவுள்ளதாக அறியப்படுகின்றது.

வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான தமிழ் மொழிக்கான பதவி உயர்வுக்கான பரீட்சை நடைபெற்ற போது அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து ஒரு முஸ்லிம் ஒரு தமிழ் அதிகாரிகள் மட்டுமே குறித்த பரீட்சைக்கு தோற்றியுள்ளார்கள்.

தற்போது கல்முனை பிரதேச செயலகத்தில் தனியான அலுவலகத்தில் கடமையாற்றும் முகம்மட் ஜெஸூர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட அதிகாரியான கோகுலதீபன் ஆகியோரே குறித்த பரீட்சைக்குத் தோற்றியுள்ள அதிகாரிகளாவர்.

தமிழ் மொழிக்கு வேறு யாரும் தோற்றவில்லை. கரையோரம் பேணல் மற்றும் மூலவள முகாமைத்துவ திணைக்களத்தின் மாவட்ட இணைப்பாளர்களாக அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றி வரும் இரண்டு அதிகாரிகள் மட்டுமே குறித்த பரீட்சைக்கு தோற்றியுள்ளார்கள்.

தமிழ் மொழி எழுத, வாசிக்க, பேச முடியாத சிங்களம் மட்டுமே பேசத் தெரிந்த அதிகாரி ஒருவர் குறித்த பரீட்சை வினாத்தாளை திருத்தியுள்ளார்.

தமிழ் மொழி எழுத, வாசிக்க, பேச முடியாத சிங்களம் மட்டுமே பேசத் தெரிந்த அதிகாரியொருவர் தமிழ் மொழிப் பேப்பரை எப்படித் திருத்த முடியம் என்ற கேள்வியுடன், தமிழ் முஸ்லிம் இணைப்பதிகாரிகள் இருவரும் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்துள்ளார்கள்.

ஆனால் பொதுச் சேவை ஆணைக்குழுவுக்கு எதிராக நீதிமன்றம் தீர்ப்பு வழங்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.

இந்த நிலையில், கடந்த 2 வருடங்களாக வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான உதவிப்பணிப்பாளர் பதவிகள் நிரப்பப்படாமல் உள்ளது.

இதேவேளை இந்த இரண்டு அதிகாரிகள் சிரேஷ்ட அதிகாரிகள் என்பதால் இவர்கள் தான் நியமிக்கப்பட வேண்டும். வேறு யாரும் நியமிக்க முடியாது. அதனால் இந்தப்பதவி வழங்கலில் கரையோரம் பேணல் திணைக்களம் தொடர்ந்து இழுத்தடித்து வருகின்றது.

இந்த நிலையில்தான் இரண்டு மாகாணத்திற்கும் சிரேஷ்ட சிங்கள அதிகாரிகளை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக அறிய வருகின்றது.

கரையோரம் பேணல் திணைக்களம் என்பது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கீழ் உள்ளது.

இந்த விடயத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளதால் எதிர்வரும் காலங்களில் இலங்கை நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதற்கான நடவடிக்கையில் தமிழ் எம்பி ஒருவர் முன்வந்துள்ளார்.

நல்லாட்சி அரசில் இரண்டு சிறுபான்மை அதிகாரிகள் தொடர்ந்து பழிவாங்கப்படுவது தடுக்கப்பட வேண்டும். இந்த விடயத்தில் தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இணைந்து செயல்பட வேண்டும்.

இது தமிழ் முஸ்லிம் உரிமை. இப்படியான உரிமைகளை விட்டுக் கொடுப்பதன் மூலமாகவே நாம் இன்று பல புத்தர் சிலைகளுக்கு எதிராக முகம் கொடுக்க வேண்டியுள்ளது.

Facebook Comments

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here