சர்வதேச வெசாக் தின நிகழ்வின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று கண்டி தலதா மாளிகை வளாகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்ற உள்நாட்டு, வெளிநாட்டு பிரதிநிதிகள் பெரும் அசௌகரியங்கள் எதிர்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

திட்டமிட்டபடி பஸ் சேவைகள் முன்னெடுக்கப்படாமையினால், பெருமளவு வெளிநாட்டு பிரதிநிதிகள் கண்டி வீதியில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து கண்டி நோக்கி சென்ற ரயில் சேவை காலை 10.20 மணியளவிலேயே ரயில் நிலையத்தை சென்றடைந்திருக்க வேண்டும். எனினும் 10 மணிக்கு ரயில் நிலையத்திற்கு ரயில் சென்றடைந்துள்ளது.

முதலாவது ரயிலில் வருகை தந்தவர்கள் கண்டி ரயில் நிலையத்தில் இருந்து சொகுசு பஸ்களில் தங்க வேண்டிய இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர். அடுத்த ரயிலில் வந்தவர்கள் 40 நிமிடங்கள் வரை பஸ் வண்டி இல்லாமையினால் வீதியில் நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த பிரநிதிகளுக்காக ஒதுக்கப்பட்ட பஸ் வண்டிகள் வருகை தராமையினால் கண்டி பொலிஸ் அதிகாரிகள் மாற்று நடவடிக்கையினை மேற்கொண்டனர். கண்டியில் பயணிகளின் போக்குவரத்திற்காக ஈடுபடுத்தப்பட்டிருந்த பஸ் வண்டிகளை பயன்படுத்தி குறித்த பிரதிநிதிகளை உரிய இடத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

கண்டி பயணிகள் போக்குவரத்திற்காக ஈடுபட்டிருந்த அனைத்து பஸ் வண்டிகளும் தங்களின் போக்குவரத்தினை நிறுத்தி விட்டு, பொலிஸாரின் கோரிக்கையினை நிறைவேற்றினர்.

இதன்காரணமாக சர்வதேச பிரதிநிதிகள் முன்னிலையில் இலங்கையின் மானம் காப்பாற்றிக் கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விரைந்து செயற்பட்ட பஸ் சாரதிகளுக்கு பொலிஸார் தங்கள் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.