முறையற்ற பல்கலைக்கழக தெரிவால் ஆளுமை உள்ளவர்களுக்கான வாய்ப்பு மறுப்பு

இந்த உலகத்தில் எந்த பகுதிகளிலிருந்தும் மிகப் பெரிய வாய்ப்பாட்டுக் கலைஞரோ அல்லது வாத்திய கலைஞரோ வந்தால் சமமாக உட்கார்ந்து வாசிக்கக் கூடிய மிகப்பெரும் ஆளுமை உள்ளவர் கூட இன்று பல்கலைக்கழகத்திற்கு வெளியில் நிற்க வேண்டிய நிலைமை தான் என மட்டக்களப்பு விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவகத்தின் பணிப்பாளர் கலாநிதி சி. ஜெயசங்கர் தெரிவித்துள்ளார்.

மிருதங்க இசை கலைஞர் நல்லை க. கண்ணதாஸ் எழுதிய “முப்பத்தைந்து தாளங்களில் தனியாவார்த்தனம்” நூல் வெளியீட்டு விழா நேற்று நல்லூர் சட்டநாதர் இளங்கலைஞர் மன்றக் கலா மண்டபத்தில் கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பிரதி அதிபர் ச. லலீசன் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இவ்வாறு பல்வேறு துறை சார்ந்த ஆற்றல், ஆளுமை மிக்கோரை எங்களுடைய பல்கலைக்கழகங்களின் தவறான தெரிவு முறையால் வெளியில் விட்டு விடுகின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.

நாங்கள் படித்து பட்டம் பெற்றுவிட்டால் எல்லாவற்றிற்கும் தகுதியுடையவர்களாகி விடுகிறோமா? அவ்வாறு தகுதியுடைய ஆசிரியர்களை பல்கலைக்கழகங்கள் பெற்றுக் கொடுக்கின்றனவா? என்பது மிக முக்கியமானதொரு கேள்வியாகும்.

இன்று உயர் பல்கலைக்கழக அழகியற் கற்கை நிறுவகங்களில் நாங்கள் வேலை செய்து கொண்டிருக்கின்றோம்.

எங்களுக்கு முன்னால் எழுகின்ற மிக முக்கியமான கேள்வி என்னவெனில் தலைமுறைக் கலைஞர்களை தனது வீட்டு முன்றலிருந்து குழந்தை மா.சண்முகலிங்கம், ஓவியர் மார்க் போன்றோர் உருவாக்கியிருக்கின்றனர்.

சங்கீத வித்துவான்கள், மிருதங்க வித்துவான்கள். நடனக் கலைஞர்கள் எனப் பெயர் பெற்ற கலைஞர்கள், ஆளுமைகள் வீட்டு முன்றலிலிருந்து உருவாக்கியிருக்கிறார்கள்.

நாங்கள் மிகப் பெரிய கட்டடங்களிலிருந்து பல மில்லியன் ரூபா செலவில் பட்டம் பெற்றவர்களை வெளியே அனுப்பிக் கொண்டிருக்கின்றோம்.

அவர்களில் எத்தனை பேர் தங்களை கலைஞர்களாக நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றனர்.

எல்லையில் இராணுவத்தை காவலுக்கு வைத்துவிட்டு இரு காலனித்துவ சிந்தனையுடன் வாழ்கின்ற சமூகம் ஒரு விடுதலை பெற்ற சமூகமாக இருக்க முடியாது.

நாங்கள் பண்பாடு என எதைச் சொல்லுகின்றோம். கல்வி என்று எதனைக் கொண்டாடுகின்றோம் என்பது தொடர்பில் நாங்கள் தீவிரமாக மறுபரிசீலனை செய்ய வேண்டியவர்களாகவுள்ளோம் என மேலும் தெரிவித்தார்.

  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here