இராணுவத்தினரால் தமிழ் மக்கள் 34 பேர் படுகொலை செய்யப்பட்டனர்

உயிலங்குளம் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட தாக்குதலின் போது இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டிருந்ததாக வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இதற்கு பதில் நடவடிக்கையாக மன்னார் நோக்கி வந்த பேருந்தின் மீது இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில், தமிழ் மக்கள் 34 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மன்னார் மதவாச்சி பிரதான வீதி உயிலங்குளம் – முருங்கன் 11ஆம் கட்டை சந்தியில் இன்று மதியம் சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.இந்த நினைவுகூரலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் அவ்வாறு தெரிவித்தார்.

தமிழ் மக்கள் மீதான இனப்படுகொலையின் போது சுமார் ஒரு இலட்சத்திற்கு மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் மே மாதம் 12ஆம் திகதி தொடக்கம் 18 வரை தமிழர் தாயகப்பகுதிகளில் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் நினைவேந்தல் வாரத்தின் 6ஆவது நாளான இன்று மன்னார் மாவட்டம் உயிலங்குளம் பகுதியில் இடம் பெற்ற படுகொலையினை நினைவு கூர்ந்துள்ளோம்.

அன்றைய கால கட்டத்தில் உயிலங்குளம் பகுதியில் வைத்து இராணுவத்தினர் மீது விடுதலைப்புலிகள் மோற்கொண்ட கன்னி வெடித்தாக்குதலின் போது இராணுவத்தினர் 7 பேர் கொல்லப்பட்டிருந்தனர்.

இதனைத் தொடர்ந்து அப்பகுதியூடாக பொது மக்கள் பயணம் செய்த பேருந்தினை வழி மறித்த இராணுவத்தினர் பேருந்தில் பயணம் செய்த மக்களை சுட்டுக்கொலை செய்ய முயற்சித்தனர்.

எனினும் குறித்த பேருந்தின் நடத்துனராக இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த அமரர் வில்லியம் மக்களை கொலை செய்ய முயற்சி செய்த இராணுவத்திடம் அவர்களை எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கூறினார்.

எனினும் மக்களை நோக்கி சுட முற்பட்ட போது மக்களை சுடுவதாக இருந்தால் முதலில் நடத்துனரான என்னை சுட்டுக்கொன்று விட்ட பின்பு தான் தமிழ் மக்கள் மீது கை வைக்க முடியும் என்று கூறினார்.

அதன் போது சிங்கள படைகளினால் குறித்த பேருந்தின் நடத்துனர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்த குறித்த பேருந்தில் பயணித்த பயணிகளான 34 பொது மக்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். சுடப்பட்ட போது உயிர் தப்பிய ஒருவர் இன்றும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.

இவ்வாறு சுட்டு படு கொலை செய்யப்பட்டவர்களை நினைவு கூறும் வகையில் இன்று இப்பகுதியில் உள்ள வீதி அருகிலே அதாவது பயணித்த 34 பொதுமக்களும் சுட்டு படுகொலை செய்யப்பட்ட அந்த இடத்திலே நினைவேந்தல் வாரத்தின் 6ஆவது நாளை அனுஷ்டிக்கின்றோம்.

படுகொலை செய்யப்பட்ட அத்தனை மக்களுக்கும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொள்ளுவதோடு அஞ்சலியையும் செலுத்துகின்றோம்.

மேலும் குறித்த பேருந்தின் சாரதியான அமரர் வில்லியத்திற்கும் நாங்கள் தலை சாய்த்து அவருக்கும் அஞ்சலியை செலுத்துகின்றோம். நடத்துனர் அமரர் வில்லியத்தின் படுகொலையினை தொடர்ந்து அவரது மகன் விடுதலைப்புலிகளுடன் இணைந்து கொண்டதும் வரலாறு.

உயிலங்குளம் போருந்து தரிப்பிட படுகொலை போன்று மன்னார் மாவட்டத்தில் பல்வேறு படுகொலைகள் இடம்பெற்றுள்ளது.

ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இந்த வகையில் ஒட்டு மொத்தமாக வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் மாத்திரமல்ல மலையகம் மற்றும் இலங்கை முழுவதுமாக படுகொலை செய்யப்பட்ட அத்தனை உறவுகளையும் நாங்கள் நினைவு கூறுகின்றோம்.

அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here