மட்டக்களப்பு – காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று மாலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்தவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆரையம்பதி, அமரசிங்கம் வீதியில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் மீது இன்னுமொரு மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச்சென்றதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் காங்கேயனோடை பிரதேசத்தினை சேர்ந்த முகமட் கலீல் மஸ்தி என்பவர் காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸாரும், மட்டக்களப்பு மாவட்ட பொலிஸ் குற்றப்புலனாய்வுத்துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.