ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்தாண்டி பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த நிலையில் முதியவரொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த விபத்தில் சித்தாண்டி 4, உதயன்மூலையைச் சேர்ந்த காத்தமுத்து தங்கராசா (வயது 70) என்ற முதியவரே படுகாயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

விபத்துக்குள்ளான முதியவர் இன்று தனது முதியோர் கொடுப்பனவைப் பெறுவதற்காக சித்தாண்டி முச்சந்திப் பிள்ளையார் ஆலயத்திற்கு முன்னாள் உள்ள மஞ்சள் கடவையூடாக சைக்கிளிலில் சென்று கொண்டிருந்த வேளையில் அதிவேகமாக வந்த தனியார் பேருந்தொன்று மோதியுள்ளது.

இதன்போது விபத்துக்குள்ளான வயோதிபரின் தலை மற்றும் முகத்தில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய பேருந்து சித்தாண்டி பிரதேச பொது மக்களினால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், பேருந்து நடத்துனர் மற்றும் ஓட்டுனர் தலைமறைவாகியுள்ளதாக தெரியவருகின்றது.

காயமடைந்தவர் மாவடிவேம்பு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த ஏறாவூர் பொலிசார் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.