யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 8 சந்தேகநபர்களில் மூவருக்கு மூன்றாண்டுகள் கடூழிய சிறைத்தண்டனையும், ஏனையோருக்கு ஓராண்டு கடூழிய சிறைத்தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ்.சதீஸ்கரன் இந்த தீர்ப்பை நேற்று பிறப்பித்துள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கடந்த 2012ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் – மடத்தடி பகுதியில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்திருந்தார்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் மாணவர்கள் இருவர் உட்பட எட்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றில் தொடர்ச்சியாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் குறித்த வழக்கானது நேற்றைய தினம் தீர்ப்புக்காக யாழ். நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த வாள்வெட்டுச் சம்ப­வத்தில் ஈடுபட்ட எட்டு பேரில் 1ஆம் 2ஆம் 8ஆம் குற்றவாளிகளுக்கு மூன்றாண்டு கடூழிய சிறைத் தண்டனையும், ஏனைய ஐந்து குற்றவாளிகளுக்கும் ஓராண்டு கடூழிய சிறைத் தண்டனையும், எட்டுப் பேரும் தலா 50 ஆயிரம் ரூபா இழப்பீடு செலுத்தவும் யாழ் .நீதிவான் நீதிமன்ற நீதிவான் எஸ். சதீஸ்கரன் உத்தரவிட்டிருந்தார்.